கிறிஸ்துவுக்குள் வானவரின் யுத்தம்

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" என்றான். (யாத். 14:14).

"துரைத்தனங்களையும், அதிகாரங்களையும் உரிந்து கொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின் மேல் சிலுவையின் மேல் வெற்றி சிறந்தார் (கொலோ. 2:15)."

உங்கள் சமாதானத்தை எல்லா நேரத்திலும் காத்துக் கொள்ளுங்கள்:
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறார் என்பதை நீங்கள் விசுவாசித்தால் பயப்படமாட்டீர்கள். உங்களுடைய போராட்ட நேரத்தில், தேவனுடைய சமாதானத்தினால் நிறைந்து, சும்மா இருப்பது தான் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை. அதனால்தான் மோசே,"நீங்கள் சும்மா நின்று கொண்டு கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்" என்று சொன்னான் (யாத். 14:13). கிறிஸ்துவுக்குள், கர்த்தர் தமது இரட்சிப்பை ஏற்கனவே உங்களுக்குக் காட்டிவிட்டார். கிறிஸ்துவுக்குள் இருந்து அவருடைய வெற்றியின் மேல் உங்கள் கண்ணைப் பதித்து களிகூறுங்கள்.

உங்கள் போராட்டமே விசுவாசப் போராட்டம்தான். உங்களைப் பயப்படுத்தி, உங்கள் விசுவாசத்தைத் தாக்கி, உங்களுடைய சமாதானத்தைக் கெடுப்பதுதான் சாத்தானின் நோக்கம். உங்களுடைய விசுவாசமே, அவனுடைய தந்திரங்களை அழித்து, அவனுடைய அக்னியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடுகிறது
(1 தீமோ. 6:12;எபே. 6:16). விசுவாசமும், தேவசமாதானமும் இரட்டைக் குழந்தைகள். உங்களுக்குள் இருக்கும் தேவ சமாதானமே, கடும் புயலிலும் உங்களை உறங்கச் செய்து, கட்டளையிட்டு அடக்கச் செய்யும் (மத். 8:23-27). கிறிஸ்துவுக்குள், எல்லாப்புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்களுக்குள் இருக்கிறது (பிலி. 4:6-7). இயேசு கிறிஸ்துவின் சமாதானமே உங்களுடையதாகிவிட்டது (யோவா. 14:27).

ஆபத்துக்காலத்தில் சோர்ந்து போவீர்களானால் உங்களுடைய பெலன் குறுகினது (நீதி. 24:10). யுத்த நேரத்தில் கதறுவதைக் கூட கர்த்தர் கடிந்து கொண்டார்
(யாத். 14:15). எதற்கும் முறுமுறுக்காதீர்கள், யாரையும் குறை சொல்லாதீர்கள். அது உங்களை பெலவீனமாக்கி, செயலற்றுப் போகச் செய்துவிடும்.

அன்பானவர்களே, சாத்தானையும், அவனுடைய கிரியைகளையும் தியானித்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்கள் பிரச்சனைகளையல்ல, உங்கள் தேவனை பெரிதாய் பாருங்கள். சாத்தானைப் பெரிதாக்கவும், சிறிதாக்கவும் உங்களால் முடியும் (எண். 13:30,33). உங்களுடைய தேவன் யுத்தத்தில் வல்லவர்
(யாத். 15:3). உங்களுடைய வழிகளில் எல்லாம் அவரை நினைத்துக் கொள்ளுங்கள்
(நீதி. 3:6). சாத்தான் வல்லவன் தான். ஆனால் நீங்களோ கிறிஸ்துவுக்குள் சர்வ வல்லவர்கள். சாத்தான் உங்களுக்கு நிகரானவனே அல்ல. சத்துருவின் பயமுறுத்தல்களிலிருந்து உங்கள் கண்களை எடுத்து விடுங்கள். தேவனுடைய வார்த்தையை நம்புங்கள். கர்த்தருக்கே மகிமையையும், வல்லமையையும், ஜெயத்தையும் செலுத்துங்கள்
(சங். 29:1).

ஆண்டவரே,
"யுத்தம் என்னுடையதல்ல, உம்முடையது. நான் பயப்படவும், கலங்கவும் மாட்டேன்
(2 நாளா. 20:15)."


-Fr. S.J Berchmans-
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved