பிள்ளைகளை கர்த்தருக்காய் வளர்த்தல்....

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். - (நீதிமொழிகள் 22:6).  

இந்நாட்களில் அநேக குடும்பங்களில் நாம் காணும் பிரச்சனை, பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியாமற் போவதாகும். அவர்கள் இஷ்டத்திற்கு விடப்பட்டவர்களாக, கர்த்தருக்கு பயப்படும் பயமின்றி, பாவத்திலே வாழ்ந்து, தங்களை கெடுத்து கொண்டிருக்கும் வாலிப பிள்ளைகள் இந்த நாட்களில் அநேகர் உண்டு. வாலிப வயதிற்கு வந்த பின் அவர்களை மாற்றுவது என்று முடியாத காரியமாகும். சிறுவயதிலேயே அவர்களுக்கு கர்த்தருடைய பயத்தை போதித்து வளர்க்கும்போது, பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்ற வசனத்தின்படி அவர்கள் தங்களை காத்து கொள்வார்கள்.


நம்முடைய பிள்ளைகள் கர்த்தருக்குள் இருக்க வேண்டும், கர்த்தருக்கு பிரியமானவர்களாக, சமுதாயத்திற்கு பிரயோஜனமாயிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தகப்பனும், தாயும் ஆசிப்பதுண்டு. அதில் தாய்மாருக்கான கீழ்க்கண்ட ஆலோசனைகளை 19 பிள்ளைகளுக்கு தாயாராயிருந்த சூசன்னாள் அவர்கள், ஜான் வெஸ்லியின் ஜெபிக்கும் தாயார் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை தன் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவனுடைய வார்த்தையை போதிப்பதற்கு ஒரு மணி நேரம் செலவழிப்பார்கள். இங்கிலாந்து தேசத்தில் பெரும் எழுப்புதல் ஏற்படுவதற்கு காரணமாயிருந்த ஜான் வெஸ்லிக்கும், கீர்த்தனை எழுத்தாளரான சார்லஸ் வெஸ்லிக்கும் உத்தம் தாயாக விளங்கினவர்கள். அவர்கள் ஆலோசனையை பற்றி தியானிப்பது ஏற்றதாக இருக்கும்.

'ஆண்டவருக்கென்று உங்கள் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறீர்களா? அதற்கு பிரதானமான முதல் நிபந்தனை அவ்வித பாரம் கொண்ட ஓர் தாய் தன் ஜீவியத்தில் உலக சுகபோகத்தை முற்றிலும் உதறினவளாயிருக்க வேண்டும். இரண்டாவதாக அவள் தன் முழு வாழ்வையும் தன் பிள்ளைகளின் ஆத்துமாக்களை இரட்சிப்பதற்கென்றே அர்பணித்திருக்க வேண்டும். 'ஒரு தாய்க்கு அதைவிட மேலான வாழ்க்கை வேறில்லை' என்பதை ஆழமாய் அறிந்தவளாய் இருக்க வேண்டும்.

நம் பிள்ளைகள் ஒரு வயதாயிருக்கும்போதே பிரம்பிற்கு பயப்படவும், மெதுவாக அழவும் கற்று தர வேண்டும். இவ்வாறு செய்வதற்கு நீங்கள் ஜாக்கிரதை கொண்டு விட்டால் பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு நேர வேண்டிய திரளான தண்டiயிலிருந்து அவர்களை நீங்கள் காப்பாற்றி விடலாம். கோழை மனம் கொண்ட பிள்ளைகள் தண்டனைக்கு பயந்து போய் பொய் சொல்லும்படி தூண்டப்படுவது சாத்தியமே. இந்நிலையில் 'யாரெல்லாம் தாங்கள் செய்த தவறை அறிக்கை செய்து அதற்காக மனம் வருந்துகிறார்களோ அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்' என்று நாம் தெளிவுபட பிள்ளைகளுக்கு அறிவித்து விட்டால் பொய் சொல்வதிலிருந்து பிள்ளைகளை நாம் காத்து கொள்ள முடியும்.

தேவனிடம் பயபக்தியாய் இருக்கும்படி பிள்ளைகளுக்கு கற்றுதர வேண்டும். குறிப்பாக ஜெபவேளைகளில் அமைதியாய் இருக்கும்படியாகவும், ஒவ்வொரு நாளும் அவர்களாகவே ஜெபிப்பதற்கும் கற்றுத்தர வேண்டும். பெற்றோரிடத்தில் மாத்திரமல்ல, வேலையாட்களிடத்திலும் மரியாதையோடு பேச கற்று தர வேண்டும்.

பிள்ளைகளிடம் காணப்படும் சில குழந்தைத்தனமான மதியீனங்களை நாம் பொருட்படுத்த கூடாது. இருப்பினும் இவைகளில் சில கண்டிக்கப்பட வேண்டியதாயிருக்கும். இது போன்ற காரியங்களை மிருதுவாகவே கண்டிக்க வேண்டும். ஆனால் பகிங்கரமான கீழ்ப்படியாமை கண்டிக்காமல் இருக்க கூடாது.

பிள்ளைகளுக்கு தரும் வாக்குறுதிகளை பெற்றோர்களாகிய நாம் நிறைவேற்றுவுது மிகமிக முக்கியமானதாகும். ஏதாவது ஒன்றை வாங்கி தருவேன் என்று பிள்ளைகளிடம் சொல்லியிருந்தால் அவைகளை கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும். அவர்கள் நமக்கு கீழ்ப்படியும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக அவர்களை பாராட்ட வேண்டும். பிள்ளைகள் சரியான காரியங்களை செய்யும்போது ஏதேனும் பிழை ஏற்பட்டால் தண்டிக்க கூடாது.

நம் பிள்ளைகளை அன்போடு கூட கண்டிப்பிலும் வளர்த்தால் அவர்களின் ஆத்துமாவை நித்திய அழிவிலிருந்து காக்கும் தாய்மார்களாக விளங்குவீர்கள்'. கர்த்தர் தாமே இந்த ஆலோசனைகளின்படி நம் பிள்ளைகளை வளர்க்க ஒவ்வொரு பெற்றோருக்கும், விசேஷமாக ஒவ்வொரு தாய்க்கும் உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!


Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved