அம்பெய்த படங்கள்


அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். ( மத்தேயு 25:40).

ஒரு போதகர் சபையில் நடந்த ஒரு ரிட்ரீட் கூட்டத்தில் யார் யார் தங்களுக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களுடைய படத்தை வரைந்து, அதை அருகிலிருந்த சுவற்றில் உள்ள இலக்கின் மேல் மாட்டிவைத்து, அதன் மேல் அம்புகளை எய்யலாம் என்று கூறினார். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடிக்காத நபரை மனதில் வைத்து, ஏறத்தாழ அவர்களுடைய உருவ படங்களை வரைந்து வைத்துக் கொண்டார்கள். (யாருக்கும் தெரியாது தங்களை தான் மற்றவர் வரைகிறார் என்று) அவர்களுடைய முறை வந்தபோது தங்கள் படங்களை அந்த இலக்கின் மேல் வைத்து அதன் மேல் அம்புகளை எய்தார்கள். இதை விளையாட்டுக்குத் தான் செய்தார்கள். நேரம் கடந்து விட்டபடியால் சிலருக்கு அம்பெய்ய நேரம் கிடைக்காதது வருத்தமாக இருந்தது.


கடைசியில் போதகர் அவர்கள் அம்பெய்த படங்கள் இருந்த இலக்கை கிழித்து எடுத்தபோது, எல்லாவற்றிற்கும் பின்னால் இயேசுகிறிஸ்துவின் படம் இருந்தது. அவருடைய முகமெல்லாம் அம்பெய்து கிழிக்கப்பட்டிருந்தது. அப்போது போதகர் சொன்னார், ‘மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று இயேசு கூறியதை ஞாபகப்படுத்தினார். அப்பொழுது எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் வந்தது.

ஆம் பிரியமானவர்களே! நமது கிறிஸ்தவ சகோதரருக்கு விரோதமாக எத்தனைப் பேச்சுகள் பேசுகிறோம். ஒரே சபையை சேர்ந்தவர்களாயிருந்தாலும் எத்தனை பிரிவினை! எத்தனை கோப தாபங்கள்! எத்தனை பேர் மேல் மனக்கசப்பு! எத்தனை மன்னியாத தன்மைகள்! ஆனால்; நாம் எல்லாரும் தெய்வமாக கொண்டிருப்பது இயேசுகிறிஸ்துவைத்தான். நாம் எய்யும் ஒவ்வொரு வார்த்தைகளும் செயல்களும் கிறிஸ்துவைத்தான் குறிப்பார்க்கிறது என்பது இந்தக் கதையின் மூலம் தெரிகிறதல்லவா! நாம் யார் படத்தின் மேலும் அம்பெய்வதில்லை, ஆனால், அவர்களுக்குப் பின்னால் எத்தனை வார்த்தைகளைப் பேசுகிறோம்!  ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்’ -(யோவான் 13:35) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே! ஒருவர் மேல்ஒருவர் அன்பு செலுத்துவோம். நமது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் விரோதமாக எந்த காரியங்களும் பேசாதபடி, எந்தக் காரியங்களும் செய்யாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம். இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் என்பதை மற்றவர்கள் மேல் அன்புகூறுவதன் மூலம் வெளிப்படுத்துவோம்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved