கர்த்தரின் சிட்சை

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார். - (எபிரேயர் 12:6).

ஒரு பெரிய கட்டிடத்தை கட்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. கட்டிட மேஸ்திரி ஒருவர் நான்காவது மாடியிலிருந்து சித்தாளை கூப்பிட நினைத்து சத்தமாக கத்தினார். சித்தாளின் காதுகளில சத்தம் விழவில்லை. மறுபடியும் கூப்பிட்டார். பலனில்லை. போதாத குறைக்கு இயந்திரங்களின் சத்தங்கள் அவரின் காதை அடைத்தது. மேஸ்திரி வேறு வழியின்றி ஒரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் போட்டார். திடுக்கிட்டு, திரும்பி பார்த்த சித்தாள், 'என்ன வேண்டும் ஐயா?' என்று கேட்டான். மேஸ்திரி, 'மேலிருந்து பெரிய கிரானைட் கல்லை இறக்குகிறோம். அதனால் உன்னை கொஞ்சம் விலகி நிற்க சொன்னேன்' என்றார்.

இதேப்போலத்தான் ஆண்டவர் நம்மிடம் பேசும்போதெல்லாம் நம்முடைய பாவம் என்னும் தூரம் அந்த உறவை தடுக்கிறது. அதோடு கூட இவ்வுலகத்தின் ஆசைகள், துர்க்குணங்கள், அவர் அழைக்கும் குரலை கேட்கக்கூடாதபடிக்கு நம் காதுகளை அடைத்து விடுகின்றன. ஆகவே தேவனும் வேறு வழியின்றி கற்கள் போன்ற சில சிட்சைகளை அனுப்புகிறார். இந்த சிட்சையின் நிமித்தமாகவாவது என் மகன், மகள் என்னை நோக்கி பாக்கமாட்டானா? என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார். தேவனின் நோக்கம் என்ன? இந்த சிறு கல்லை போட்டால் என் பிள்ளையை பெரிய கல்லாகிற பாதாளத்திற்கு விலக்கி தப்புவித்து விடலாம் என்பதே.

பிரியமானவர்களே, தேவனுடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிருங்கள், அவரால் கடிந்து கொள்ளப்படும்போது சோர்ந்து போகாதீர்கள். தகப்பன் சிட்சியாத பிள்ளை உண்டோ? நாம் அவரது பிள்ளைகள் என்றால் நிச்சயமாக நாம வழிதப்பி நடக்கும்போது, அவர் நம்மை சிட்சிப்பார். அந்த சிட்சையில நாம செய்ய வேண்டியது என்ன? தேவனை நோக்கி பார்க்க வேண்டும். 'நான் சரி செய்ய வேண்டிய காரியம் என்ன? மாற்றி கொள்ள வேண்டிய குணநலன் என்ன?' என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேதத்தை வாசிக்கும்போதும் தேவனுடைய வார்த்தையை கேட்கும்போதும்,அவர் சுட்டிக்காட்டுகிற உணர்த்துகிற காரியங்களை விட்டுவிட வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மருத்துவ உலகம் என்ன சொல்லுகிறது? 'எந்த ஒரு பெரிய வியாதியும் முன் அறிகுறிகளின்றி திடீரென்னு வருவதில்லை. சிறுசிறு கோளாறுகள் தெரியம்போதே உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் பெரிய ஆபத்திற்கு தப்பிக்கலாம்' என்பதே. ஆம், இது நம் ஆவிக்குரிய வாழ்விலும் உ;ணமை. சிறிய சிட்சையில் நம்மை திருத்தி கொண்டால், வரப்போகும் பேராபத்திற்கு தப்பித்து கொள்ளலாம். ஒரு நாள் வரப்போகிறது. அந்நாளில் நாம் செய்யும சகல காரியமும் நியாயத்தில் கொண்டு வரப்படும். அப்போது நாம் செய்யும் அநியாயமான, துர்க்காரியங்களுக்கு நித்திய நரகம் என்னும் பேராபத்து உண்டு. அதற்கு தப்புவிக்கவே இந்த சிட்சை கர்த்தர் அனுமதிக்கிறார். ஆகவே அவரது குரலுக்கு செவிசாய்த்து அவரது பாதையில் நடப்போம், நித்திய ஜீவனை சுதந்தரித்து கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved