கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். - (சங்கீதம் 122:1)..
ஒரு தம்பதியினர் ஒரு ஞாயிற்று கிழமை காலையில் சோம்பலாக படுத்திருந்தனர். அதில் மனைவி எழுந்து ஆலயத்திற்கு செல்ல புறப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் கணவரோ எழுந்து புறப்படுகிற வழியாக இல்லை. அப்போது மனைவி, 'என்னங்க. ஆலயத்திற்கு புறப்படவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு கணவர், 'நான் இன்று ஆலயத்திற்கு வரப்போவதில்லை, ஆகையால் புறப்படவில்லை' என்று கூறினார். அதற்கு மனைவி, ஏன் என்று கேட்டதற்கு, 'நான் ஆலயத்திற்கு வராததற்கு மூன்று காரணங்கள் உண்டு, முதலாவது, ஆலயம் அனலுமில்லாமல், குளிருமில்லாமல் இருக்கிறது. இரண்டாவது, அங்கு என்னை விரும்புகிறவர்கள் யாரும் இல்லை, மூன்றாவது, எனக்கு போக வேண்டும் போல இல்லை' என்று கூறினார். அதற்கு மனைவி, 'எனக்கும் அதேபோல் மூன்று காரணங்கள் உண்டு, முதலாவது, சபை அனலாக இருக்கிறது, இரண்டாவது, குறைந்தபட்சம் 10 பேராவது உங்களை நேசிக்கிறவர்கள் அங்கு இருக்கிறார்கள். மூன்றாவது, நீங்கள் தான் அங்கு போதகர், ஆகவே எழுந்து புறப்படுங்கள்' என்று கூறினார்கள். இது வேடிக்கையாக இருந்தாலும், சிந்திக்க வேண்டிய காரியம் ஆகும்.
இந்த நாட்களில் அநேகர் சபை கூட்டங்களை புறக்கணிப்பதில்லை. ஆலயம் என்பது கர்த்தருடைய வீடு. அங்கு நாம் அவரை துதிக்க செல்லும்போது, 'உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்'(சங்கீதம் 36:8) என்ற வசனத்தின்படி தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார். கர்த்தருடைய ஆலயத்தின் சம்பூரணம் என்ன? நம்முடைய தேவைகளை தேவன் சந்திக்கிறார். அது உலகப்பிரகாரமான, சரீரப்பிரகாரமான, ஆவிக்குரிய எந்த தேவையாயிருக்கட்டும், தேவைகளை அவர் சந்தித்து, உண்மையான இருதயத்தோடும், சுத்த மனசாட்சியோடும் வருபவர்களை நிச்சயமாகவே ஆசீர்வதிக்கிறார்.
'ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்' (மத்தேயு 18:20)என்று வாக்குதத்தம் செய்த கர்த்தர் நிச்சயமாக நாம் சபையாக கூடும் நேரத்தில் தமது சமுகத்தால் நிரப்புவார். அங்கு அவருடைய பிரசன்னம் அளவில்லாமல் நிரம்பி வழிகிறதாய் இருக்கிறது. அவருடைய பிரசன்னம் இருக்கும்போது, குறைகளெல்லாம் நிறைவாக மாறி விடும். நம்மிடத்தில் காணப்படும் எல்லா குறைகளும் மாற்றப்பட்டு, நம்மை நிறைவானவர்களாக தேவன் மாற்றுவார்.
சபையை சார்ந்து நாம் இருக்கும்போது, நமக்காக ஜெபிக்கிற விசுவாசிகள் உண்டு. நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்களுடைய பிரச்சனையாக ஏற்று கொண்டு, கர்த்தரிடம் மன்றாடி ஜெபிக்கும் அன்புள்ளங்களை தேவன் நமக்கு தந்துவிடுகிறார்.
.
சபைக்கு செல்லும்போது நிச்சயமாக நமக்கும் நம் குடும்பத்திற்கும் கர்த்தருடைய பாதுகாப்பு உண்டு. வியாதிகள் வராதபடி, விபத்துகள் ஏற்படாதபடி, தேவனுடைய பிரசன்னம் நம்மை பாதுகாக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு விசுவாசி, அவர் ஏதோ பிரச்சனையினிமித்தம் சபை கூடிவருவதை நிறுத்தினார். அவருக்காக ஜெபிக்கிறவர்களும், விசாரிப்பவர்களும் இல்லாமற் போனபோது, ஒருநாள் ரோட்டை கிராஸ் செய்து போனபோது, ஒரு கார் அவர் மேல் மோதி, அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. நான் இதை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. சபைக்கு செல்லும்போது, நம்மை சுற்றிலும், போதகர்களின் ஜெபமும், விசுவாசிகளின ஜெபமும் நம்மை நிச்சயமாக பாதுகாக்கிறது.
ஆவிக்குரிய மனிதன் வளருவதற்கான உணவு அங்குதான் நமக்கு கிடைக்கிறது. சபை போதகருக்கு உங்களை பற்றியதான எல்லா காரியங்களும் அறிந்திருக்கிறபடியால், அவர் உங்களுக்கு தேவையான காரியங்களுக்காக ஜெபிப்பார். தேவையான சத்தியங்களை எடுத்து கூறி உங்களை அருமையாக வழிநடத்துவார். இப்படி, இத்தனை அற்புதங்கள் நிறைந்த சபை கூடுதலை யாரும் விட்டு விடக்கூடாது.
ஆலயத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு அநேகர் சொல்லும் காரணங்கள் உண்மையிலேயே பொய்யான காரணங்கள் தான். அவர்கள் ஆலயத்திற்கு செல்லாமல் இருப்பதற்கு முதல் காரணம், தேவன் அவர்கள் வாழ்வில் முதன்மையானவராக இல்லை, அல்லது அவர்கள் ஆலயத்திற்கு செல்வதற்கு வாஞ்சை இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆலயத்திற்கு செல்வது ஒரு விருப்பம் அல்லது, நமது இஷ்டப்படுகிற காரியம் இல்லை. அது கர்த்தரால் நியமிக்கப்பட்ட ஒன்று. 'சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்' (எபிரேயர் 10:25).நீங்கள் ஆலயத்திற்கு செல்லாமல் இருக்கும் நாளில், கர்த்தருடைய சிறந்ததை, அதாவது அந்த நாளில் தேவன் உங்களுக்கென்று, உங்கள் ஜெபத்திற்கான பதிலை கொடுக்கும் நாளாக இருக்கலாம், நீங்கள் அன்று போகாததால் அதை இழந்து போக நேரிடும். கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசீர்வாதத்தை அந்த நாளில் வைத்திருக்கிறார். நாம், சுத்த இருதயத்தோடும், திறந்த மனதோடும் செல்லும்போது, அங்கு தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்கிறோம். நீங்கள் ஆலயத்திற்கு செல்லும்போது, நீங்கள் கர்த்தரை தொழுது கொள்ளும்போது, உங்களை அறியாமல், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறீர்கள். உங்களுடைய பிள்ளைகளுக்கு கர்த்தருடைய வீட்டிற்கு செல்வதின் அவசியத்தை போதிக்கிறீர்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் சுற்றி, தேவனுடைய பாதுகாப்பு என்னும் வேலிக்குள் வந்து விடுகிறீர்கள்.
நாங்கள் குடும்பமாக ஆலயத்திற்கு செல்வதனால், எத்தனை எத்தனையோ ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிறோம். அடுத்த ஞாயிற்று கிழமை வரும்போது, கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன் என்ற வசனத்தின்படி மகிழ்ச்சியோடு ஆலயத்திற்கு செல்வோம், கர்த்தருடைய ஆசீர்வாதத்தை அளவில்லாமல் பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
Post a Comment