ஏற்றுக் கொள்ள வேண்டுமே ...

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவான் 1:12).

அமெரிக்க அதிபராக திரு. ஆண்ட்ரூ ஜேக்சன் அவர்கள் இருந்தபோது, ஒரு மனிதனுக்கு அவன் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எந்த நாட்டிலும் ஜனாதிபதி தலையிட்டு, அவனுடைய குற்றத்தை மன்னித்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். அப்படி அதிபர் ஆண்ட்ரூ அவனுக்கு மன்னித்து மரண தண்டனையை ரத்து செய்தார். ஆனால் ஆச்சரியவிதமாக அந்த மனிதன் அந்த மன்னிப்பை நிராகரித்தான்..

நீதிமன்னறத்தில் உள்ள வக்கீல்களும், மற்றவர்களும் அவனை அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி எத்தனையோ சொன்னாலும் அவன் உறுதியாக அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்..

நீதிமன்றத்தின் நீதிபதிகளும், வக்கீல்களும் அவனிடம் அந்த மன்னிப்பை ஏற்க மறுத்தால் அவனுடைய உயிர் போவது மட்டுமன்றி, அந்த மன்னிப்பை வழங்கிய ஜனாதிபதியை கேவலப்படுத்துவது போல ஆகும் என்றும் அவனிடம் கூறினர். ஆனால் அவனோ உறுதியாக மறுத்து விட்டான். ஆகவே அவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதை கொண்டு சென்றனர். சுப்ரீம் கோர்ட் ஒரு மனிதன் அதை ஏற்றுக்கொண்டாலொழிய சட்டமும் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது. என்ன ஒரு பரிதாபம்!. தேவனின் இரட்சிப்பும் இதுப்போன்றதுதான். பாவிகளாகிய நமக்காக தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் சிலுவையில் அறையப்பட்டு, இரத்தத்தை சிந்தியதால் உலகத்திற்கு இரட்சிப்பை தேவன் அளித்து விட்டார்.
 
யார் யார் அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பாவ மன்னிப்பும், இரட்சிப்பும் தேவனால் இலவசமாக கொடுக்கப்படுகிறது. எத்தனை பெரிய கிருபை!. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பை பெற்று இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாலொழிய தேவ நியாயத்தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.

இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் வந்த எந்த மனிதனுக்கும் உரியது. 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்' (அப்போஸ்தலர் 4:12) என்று வேதம் கூறுகிறது. இப்படியிருக்க அநத நாமத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் நம்முடைய கரத்தில் தான் இருக்கிறது.


'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' எத்தனைப்பேர் என்று ஒரு கணக்கு இல்லை. உலகத்தின் அத்தனை ஜனங்களும் ஏற்றுக் கொண்டாலும் அத்தனைப்பேரும் தேவனுடைய பிள்ளைகளாக நிச்சயமாக முடியும். ஆனால் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப் பேர்? இயேசுகிறிஸ்து ஒரு சாராருக்கு மட்டும்தான் வந்தார் என்று நினைத்து அவருடைய இரட்சிப்பை தள்ளிவிடுபவர்கள் எத்தனையோ கோடி கோடியான பேர்கள்! அவர் அருளும் பாவ மன்னிப்பை புறக்கணித்து தங்களுடைய வைராக்கியத்தில் வாழ்பவர்கள் கோடி கோடியானோர்!. அத்தனைப்பேரும் கர்த்தரை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக மன்றாடுவோமா? கர்த்தருடைய வசனம் சொல்லப்படும்போது அவர்கள் அதை உணர்ந்து அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு உணர்வுள்ள இருதயம் அருளும்படி ஜெபிப்போமா? இரட்சிப்பு இலவசம், ஆனால் அதை ஏற்றுக் கொள்பவர்களுக்கே!
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved