தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்..

சரித்திரத்தில் மாபெரும் வெற்றியாளர்களாக திகழ்ந்த ராஜாக்கள் எல்லாரும் போர்களை சந்தித்து வென்றவர்கள் அல்ல. சிலர் இராஜ தந்திரத்தால் போர்களைத் தவிர்த்துச் சாதனை படைத்ததும் உண்டு. சந்திக்க வேண்டிய போர்களும் உண்டு. தவிர்க்க வேண்டிய போர்களும் உண்டு.

வேதாகமத்தில் யோசியா என்ற ராஜா தேவபக்தி மிகுந்தவன். ஆனால் ஒரு முறை அவன் போரை தவிர்ப்பதற்கு பதிலாக, தேவையில்லாமல் தானாகப் போய் இன்னொரு ராஜாவோடு போரிட்டு தன்னை அழித்துக் கொண்டான்.

சில சரீர இச்சைகள் தொடர்பான போராட்டங்கள் வரும்போது அவைகளை உறுதியாகச் சந்தித்து ஜெயிக்கப் பழக வேண்டும். சில நேரங்களில் நாமே வலியப் போய் போராட்டங்களை வரவழைத்து விடக்கூடாது. நான் எவ்வளவு மோசமானவர்களோடு பழகினாலும் நல்லவனாகவே இருப்பேன். நான் எந்தப் பாவச் சூழ்நிலையிலும் யோசேப்பைப் போல பரிசுத்தனாகவே இருப்பேன் என்று சிலர் வீரவசனம் சொல்லி தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். 

நம்முடைய பலவீனங்களையும் நாம் உணரவேண்டும். சில இடங்களுக்குப் போனால் நாமும் தவறான பழக்கங்களுக்கு நேராக இழுக்கப்பட வாய்ப்புண்டு என்று நம்பினால் அந்த இடத்தை தவிர்ப்பதே நல்லது. சிலரோடு நெருங்கிப் பழகுவதால் இச்சை தொடர்பான போராட்டங்களும், சோதனைகளும் வர வாய்ப்பிருக்குமானால் அந்த பழக்கங்களையும், உறவுகளையும் விட்டுப் பின் வாங்கவேண்டும். அது பலவீனமல்ல. பலவீனங்களை உணர்ந்து ஞானமாய்ச் செயல்படுதல் ஆகும். பரீட்சைகளைச் சந்திக்க நேரிட்டால் மட்டுமே போராட வேண்டும். நம்முடைய நடத்தைகளால் பரீட்சைகள் வருவதற்கு வாய்ப்பிருந்தால் அங்கிருந்து விலகிக் கொள்ளவேண்டும். 

("நீயோ.. இவைகளை விட்டோடி.." 1 தீமோ 6:11)
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved