யாரும் நேசிக்கவில்லையோ?

உதயகுமார் எப்போதுமே ஒரு கசந்த உணர்வுடனும், வெறுத்துப் போன மனநிலையுடனும் சலிப்பான வார்த்தைகளே பேசுவான். தன் பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள், உறவினர்கள், நண்பர்கள் யாருமே தன்னை உண்மையாக நேசிக்கவில்லை என்று எப்போதும் கூறுவான்.

யாருடன் பழகினாலும் இறுதியில் அவர் ஒரு அன்பற்ற மனிதன் என்றே கண்டுபிடிப்பான். என்னை நேசிக்க யாருமில்லை. ஏன்தான் என்னை எல்லோரும் வெறுக்கிறார்களோ? என்று சொல்லிப் புலம்புவான்.

ஒரு நாள் பாஸ்டர் ஒருவர் அவனுக்கு ஆலோசனை கொடுத்தார். தம்பி... நீ முதலாவது கர்த்தரை நேசித்து அவருடைய அன்பை உண்மையாக ருசிக்க வேண்டும். அதுவரையிலும் உன்னை நேசிக்க யாரும் இல்லை என்ற பிரச்சினை தொடர்ந்து கொண்டேதானிருக்கும் என்றார். யாரும் தன்னை நேசிக்கவில்லை என்பது தாழ்வு மனப்பான்மையாலும், தவறான எண்ணத்தினாலும், சுய நலனை மட்டுமே சார்ந்து சிந்திக்கின்ற மனநிலையாலும் ஏற்படமுடியும்.

சிலரை யாரும் நேசிக்காமலில்லை. ஆனால் இவர்களின் எதிர்பார்ப்பு மிக மிக அதிகம். மலை போல நேசித்தாலும் அவர்கள் அதை ஒரு சிறுதுளி என்றே எண்ணுவார்கள். கர்த்தருடைய அன்பு ஒன்றே மிகுந்த ஆழமானதும், எவருடைய அன்புத் தேவையையும் திருப்தி செய்கின்ற அளவிற்கு அதிகமானதுமாகும். இந்த அன்பை ஒரு மனிதன் தனக்குள் பெற்றுக்கொள்ளாததன் விளைவாகவே யாரும் தன்னை நேசிக்கவில்லை என்ற பிரச்சினை ஏற்படுகிறது.

கர்த்தருடைய அளவற்ற அன்பு ஒன்றே மனிதனுடைய அளவிற்கடங்காத அன்புப் பசியை ஆற்ற வல்லது. அந்த அன்பு நமக்குள் வரும்போது, மனித அன்பைக் குறித்த ஏக்கமும், தாகமும் நீங்கிப் போகிறது. அங்கே யாரும் என்னை நேசிக்கவில்லை என்ற கவலை நீங்கி, நான் யாரை நேசிக்கத் தவறினேன் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும்.

"அறிவுக்கெட்டாத அந்த அன்பை...." எபே 3:9
    
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved