சாத்தானின் நன்மைகள்

இந்த முழு உலகத்தின் மகிமையெல்லாம் இயேசுவுக்குக் காண்பித்தான் சாத்தான்.  என்னைப் பணிந்து கொண்டால் இவைகள் யாவற்றையும் உமக்குத் தருவேன் என்றான். இதிலிருந்து இந்த பூமியில் மனிதர்களுக்கு சாத்தான் பல நன்மைகளைத் தரமுடியும் என்று தெரிகின்றது.

ஆனால் சாத்தான் மனிதர்களின் ஆசைகளைத் தருவானேயன்றி அவசியமானவைகளைத் தரமாட்டான். மனிதனுக்குள் தோன்றும் பெரும்பாலான ஆசைகள் உண்மையில் அவனுடைய நலனுக்கு அவசியமானவைகள் அல்ல.

அவன் பலத்தை தருவான். அத்துடன் பெருமையையும் தருவான். அவன் அறிவைத் தருவான். ஆனால் அகந்தையையும் சேர்த்துத் தருவான். அவன் இன்பங்களைத் தருவான். அந்த இன்பங்களின் பின்னால் நீங்காத துன்பங்கள் இணைந்திருக்கும். அவன் பணத்தையும் பொருளையும் தருவான். ஆனால் பேராசையையும், சுயநலத்தையும் இணைத்தே தருவான். அவன் பதவிகளையும், அந்தஸ்துகளையும் தருவான். ஆனால் அவைகளோடு ஆணவத்தையும், மனமேட்டிமையையும் மறைத்து வைத்திருப்பான். அவன் இச்சைகளை நிறைவேற்ற எளிதான வாய்ப்புகளைத் தருவான். ஆனால் அந்த இச்சைகளின் நிறைவேறுதல் கேட்டையும், அழிவையும் கொண்டு வரும்.

அவன் மனிதனுக்கு அன்பையோ, நல்ல பண்புகளையோ, உயர்ந்த சிந்தைகளையோ, மன அமைதியையோ, பரிசுத்தத்தையோ, உயர்ந்த நெறிமுறைகளையோ தரமாட்டான். ஏனென்றால் மனித வாழ்வுக்குத் தேவையானவைகளைத் தராமல் மனித அழிவுக்குத் தேவையானவைகளையே அவனால் தரமுடியும், கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து தான் நமக்கு அவசியமானவைகளைத் தருகின்றார். ஏனென்றால் அவர் ஒருவரே நம்முடைய உள்ளான தேவைகளை அறிந்தவர். அவராலே மட்டுமே நம்முடைய உண்மையான தேவைகளை அருள முடியும்.

"இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்...." மத்தேயு 4:9


Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved