இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையின் வளர்ச்சி (03)

Dr. Thomas coke
மெதடிஸ்ஸம் இங்கிலாந்தெங்கும் பரவிய காலத்தில் இதனை உலகின் வேறு பாகங்களுக்கும் கொண்டுசெல்ல ஊக்கமும் ஆர்வமும் மிகுதியாயிருந்தது. அக்காலத்தில் 1809 இல் இலங்கையின் பிரதான நீதிபதியாக இருந்த சேர் அலக்சாண்டர் ஜோன்சன் இலங்கை மெதடிஸ்ஸத்தை பரப்ப ஏற்ற இடம் என குறிப்பிட்டார்.

இவரது கருத்தை துணிவுடன் எடுத்தவர் டாக்டர்.தோமஸ் குக், போதகரும் சட்ட நிபுணருமாயிருந்தவர். பெரேகன் எனும் வேல்ஸ்ஸிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது செல்வத்தின் பெரும்பகுதியை மேற்கிந்திய தீவுகளிலும் மேற்கு அமெரிக்காவிலும் கிறிஸ்தவத்தை பரப்ப செலவழித்தார். 


30 வருடங்களுக்கு மேலாக ஆசியாவிற்கு கிறிஸ்தவத்தை எடுத்து செல்லவேண்டும் என்ற நோக்கம் பிரித்தானியர் இலங்கையை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றும் வரை கைகூடவில்லை. ஜூலை 1813ல் லிவர்பூல் இல் நடைபெற்ற மெதடிஸ்த மாநாட்டில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் இவருடன் 6 மிஷனரிமாரையும் செல்ல அனுமதித்தது. டிசம்பர் 31, 1813 ல் தமது பிரயாணத்தை ஆரம்பித்தனர். 'கபல்வா' என்ற கப்பலில் தோமஸ் குக், பென்ஞமின் குளோவ், வில்லியம் ஹவார்ட் அவரது மனைவியும், ஏனைய 4 மிஷனரிகளான ஜேம்ஸ் லின்ஞ், வில்லியம் ஓல்ட் மற்றும் அவரது மனைவி, ஜோர்ஜ் எஸ்கின் ஆகியோர் 'லேடி மெல்விலே' என்ற கப்பலிலும் பயணித்தனர். கப்பல்கள் 1200 தொன் சுமையை தாங்கியவாறு நன்னம்பிக்கை முனை வழியே 6 மாதங்களுக்கு பயணித்தன. 


பயணத்தில் புயல்கள் குறுக்கிட்டன. வழியிலே வில்லியம் ஓல்ட்டின் மனைவி வியாதியினால் மரித்தார். ஹவார்ட் நோய்வாய்ப்பட்டார். இந்தியாவை அடைய 3 வாரங்கள் இருந்த நிலையில் தோமஸ் குக் இன் உடல்நிலை மோசமானது. மே 3ம் திகதி தோமஸ் குக் இறந்தார். தங்கள் தலைவரின் திடீர் மறைவு ஏனைய மிஷனரிகளுக்கு ஒரு பேரிடியாக இருந்தது. தோமஸ் குக் இலங்கையை அடையவில்லை. ஏதிர்பார்த்திராத தலைவரின் மறைவு, பணவசதியின்மை போன்ற பிரச்சினைகள் இருந்த போதும் 6 மிஷனரிகளும் கடவுளையே முழுமையாக நம்பி 1814 மே 21 ல் இந்தியாவின் பம்பாயை அடைந்தனர். அவர்கள் எதிர்பாராத வழிகளிலிருந்து உதவிகள் கிட்டியது. 


ஹவார்ட் மற்றும் அவரது மனைவி நோய்வாய்ப்பட்டதால் அவர்களின்றி 20ம் திகதி இலங்கைக்கான தமது பயணத்தை தொடர்ந்தனர்.அப்போது இலங்கையின் ஆளுநராக இருந்த ரொபட் பிறவுன்றிக் மெதடிஸ்த மிஷனரிகளின் இலங்கை வருகை குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார். 2 படகுகள் மிஷனரிகளுக்காக அனுப்பப்பட்டன. காலி கடற்பகுதியிலே தரையிறங்க திட்டம் தீட்டியும் இறுதியில் பலத்த காற்றும், அலைகளும் மிஷனரிகளை வெல்கம குடாவிலே போய் சேர்த்தது. ஜீன் 29 ல் கரையை அடைந்தனர். இதுவே இலங்கை மெதடிஸ்த  மிஷனுக்கான முதற்படியாகும்.


Sir Robert Brownrigg
ஜீலை 3, 1814 ஞாயிறு அன்று மிஷனரிகள் தமது முதலாவது ஆராதனையை ஒல்லாந்து சபையில் நடத்தியமை மறக்கமுடியாத நிகழ்வாகும். இளம் வைத்தியரான வில்லியம் அலக்சாண்டர்  லல்மூன் தன்னை  மெதடிஸ்த மிஷனுக்காக அர்ப்பணித்தார். இவரே இம் மிஷனின் முதற்கனியாவார். இவர் 48 வருடங்களுக்கு மேல் இப்பணியில் விசுவாசமாக இருந்தார். 11ம் திகதி ஜீலையில் இடம்பெற்ற மாநாட்டில் குறித்த இடங்களுக்கு மிஷனரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். 

Old Dutch Church
  • யாழ்ப்பாணம்- ஜேம்ஸ் லின்ஞ் தோமஸ் குயின்ஸ்
  • மட்டக்களப்பு- வில்லியம் ஒல்ற் 
  • காலி- பென்ஜமின் குளோவ் 
  • மாத்தறை- ஜோர்ஜ் எஸ்கின் 
  • கொழும்பு- மார்ட்டின் ஹவார்ட். 
Rev. James
William Ault
Rev. Benjamin

தற்போது 198 ஆண்டுகள் கடந்த நிலையில் விதைக்கப்பட்ட மெதடிஸ்ஸத்தின் பலன் அறுக்கப்படுகிறது. நாமும் எழுந்து கட்டுவோம் வாருங்கள். கர்த்தரில் மகிழ்ச்சியாயிருப்பதே எமது பெலன். 
  • நாமும் இவ் உலக நீதியை கருத்திற்கொண்டு கடவுளுக்கு விசுவாசமுள்ள சேவகர்களாக மற்றவர்கள் நலம்பெற உதவுவோம்.
  • கஷ்டத்தால் வாடும் மக்களை இனங்கண்டு அவர்களுக்கு தோள் கொடுத்து மனிதாபிமானத்துடன் சேவை செய்வோம்.
  • பின் தங்கிய இடங்களில் வெஸ்லி அவர்களை போன்று குழுக்களை நியமித்து முன்னேற்றத்துக்காக முயற்சிப்போம்.
இனி மேல் அடையப்போகும் நன்மைகளுக்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தி பரிசுத்த ஆவியின் வழிநடத்தலில் தங்கியிருப்போம்.  இதுவரை நம்மை நடத்தி வந்த கரம் இனிமேலும் நம்மை வழிநடத்தும். ஆகவே நாங்கள் நம்பிக்கையுடன் முன்னோக்கி சென்று தொடர்ந்து இவ்வுலகில் பிரகாசிக்க வேண்டும்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved