இளங்கிளை

கிறிஸ்துவின் வருகை, வறட்சியான நிலத்திலிருந்து எழும்புகின்ற ஒரு இளங்கிளையை  போன்றதாகும். செடி முளைத்து நிலைத்திருக்க வறட்சியான நிலம் மிகச் சிறிய நம்பிக்கையை கொடுக்கிறது. இது வறண்டதும் கடினமானதுமாக இருப்பதால் பெரும்பாலான செடிகள் முளைத்து அந்த நிலத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிவருவது கடினமாக இருக்கிறது.

எனினும், இப்படிப்பட்ட கடினமான நிலத்தை உடைத்து வருகிறதும், வறண்டுபோன ஜீவனற்ற சூழ்நிலையில் ஜீவனைக் கொடுக்கிறதுமான, ஒரு இளங்கிளையாக இயேசு வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கிறது. 

இயேசு பிறந்த போது, அவருடைய மக்கள் தேவனுடைய வார்த்தைக்கு கடினப்பட்டு இருந்தார்கள். நானூறு வருடங்களில் தேவன் தன்னுடைய மக்களோடு பேசியதாக, எழுதப்பட்ட எந்த குறிப்பும் இல்லை. இயேசுவின் காலத்திலிருந்த சமயத்தலைவர்கள், சத்தியங்களை படித்து மனப்பாடம் செய்திருந்தார்கள். ஆனால் வார்த்தைகள் அவர்களுக்கு ஜீவனற்று இருந்தன. உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் மாறுபட்ட சந்ததியாராக அவர்கள் இருந்ததால், அவர்கள் அவரைக் கொன்றார்கள். எனினும் அவர்கள் அவரைப் பகைத்திருந்த போதிலும் இயேசுவை நம்பியிருந்த அனைவருக்கும், அவர் ஜீவனைக் கொண்டு வந்தார். 

சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்வதற்க்கு எந்தவிதக் கடினமான மனப்பான்மை கொண்டவர்களாயிருந்தாலும், எந்த மனிதருக்கும், சமூகத்திற்கும் அல்லது கலாச்சாரத்திற்கும், ஜீவனைக் கொண்டு வருவதற்கு, இயேசு வல்லவராயிருக்கிறார். கசப்பு மட்டுமே நிறைந்திருக்கிற ஒரு இருதயத்தை பிளந்து அதற்குள் ஜீவனை எவ்வாறு கொண்டுவருவது என்பதை இயேசு அறிந்திருக்கிறார் என்ற உண்மையை மிகக் கொடிய பாவியுங்கூட கண்டு கொள்வான். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில், இயேசுவின் கிரியை முதலில் பலவீனமாகத் தோன்றும். ஆனால் கடுகு விதையைப் போல, இறுதியில் மிக உறுதியாக அது வளரும். 

நீங்கள் கரிசனை கொள்கிற ஒருவருக்காக ஜெபிக்கும் போது, கிறிஸ்துவுக்குள் அவர் செவி சாய்க்கவில்லையாயின், அதைக் குறித்து சோர்ந்து போகாதீர்கள். ஒரு கடினமான, ஈரப்பசையற்ற ஒரு சூழ்நிலையில், ஒரு இளங்கிளை வளருவதற்கான வழியை அது எவ்வாறு கண்டு கொள்ளுமோ, அதைப் போலவே அன்பில்லாத, முற்றிலும் வறண்டு விட்ட ஒரு உள்ளத்தில் இயேசுவின் அன்பு, ஜீவனை கொண்டுவருவதற்கு வல்லமையுடையதாக இருக்கிறது.     

"இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்" 
ஏசாயா 53:2
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved