அருணின் அறை சாத்தியிருந்தது. ஆனால் அவன் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த சத்தம் வெளியே கேட்டது. அருணைப் பார்க்கச் சென்ற அஸ்வின் அவன் யாருடனோ பேசிக் கொண்டிருக்கின்றான், அவனைத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணிக் கதவைத் தட்டாமல் வெளியே நின்றான்.
சற்று நேரத்திற்கு பின்பு அருண் கதவைத் திறந்து வெளியே வந்தான். ஆனால் அந்த அறையில் யாரும் இல்லை. போன் பேசிக் கொண்டிருந்தாயா? என்று கேட்டான் அஸ்வின். இல்லையே என்றான் அருண். பின்னர் யாரோடு பேசிக் கொண்டிருந்தாய்? சத்தம் கேட்டதே என்றான் அஸ்வின். ஓ அதுவா.. நான் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தேன், என்றான் அருண். ஜெபமா.... நிஜமாகவா? யாரோ நெருங்கிய நண்பனுடன் பேசுவது போல் அல்லவா இருந்தது என்றான் அஸ்வின். அது உண்மை தான். என் முதல் நண்பர் இயேசு தான், அவரிடம் நான் நண்பனைப் போல தான் மனம் திறந்து பேசுவேன் என்றான் அருண்.
ஆம், ஜெபம் என்பது மந்திரம் சொல்வது போல் அல்ல. அதற்கு விசேஷ பயிற்சியோ, அழகான அடுக்கு மொழிகளோ தேவையில்லை. ஒரு நண்பரிடம் பேசுவது போல மனதில் தோன்றியதையெல்லாம் சாதாரணமான வார்த்தைகளில் தேவ சமூகத்தில் பேசுவது தான் ஜெபம். தாவீதின் சங்கீதங்கள் யாவும் அவன் தேவனை நோக்கிச் செய்த ஜெபங்களே. அவைகள் மிக மிகச் சாதாரண வார்த்தைகளே. ஆனால் கர்த்தரை ஒரு நல்ல நண்பரைப் போல எண்ணி அவன் மனந்திறந்து இருதய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுப் பேசினான். இன்றிலிருந்து நீங்களும் உங்கள் மனதில் உள்ள எல்லாவற்றையும் சாதாரண வார்த்தைகளால் தேவனிடம் பேசுங்கள் அது தான் ஜெபம்..(1 சாமுவேல் 1:1-18)