பிள்ளைகளின் கடமை...

ஒருமுறை வாலிபன் ஒருவனிடம் தேவ ஊழியர் ஒருவர் "எப்படிப்பட்ட பெண் உனக்கு வாழ்க்கைத் துணையாக வர வேண்டும்?" என்று விரும்புகின்றாய் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன் "என்னைக் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோரை அன்புடன் கவனிக்கும் மனப்பக்குவம் உடைய ஒரு பெண்ணையே விரும்புகின்றேன்" என்றான். அழகான பெண் வேண்டும், நன்கு படித்த பெண் வேண்டும், நிறைய சம்பாதிக்கும் பெண் வேண்டும் என்று விரும்புகின்ற வாலிபர்கள் நடுவில் இவன் வித்தியாசமானவனாயிருந்தான்.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரைத் தாங்கள் விரும்பும் காரியங்களுக்காக அலட்சியம் செய்யும் வாலிபர்கள் தான் இன்று ஏராளம். தன்னுடைய மனைவியின், கணவனின் சந்தோசத்திற்காக ஆயிரம் கனவுகளுடன் வளர்த்த பெற்றோரை முதிர் வயதுகளில் தனித்துத் துன்புற விட்டுவிடும் வாலிபர்கள் ஏராளம். பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டு, தாங்கள் ஜாலியாகத் தனிக்குடித்தனம் நடத்துவதை நவீன அந்தஸ்தாக எண்ணுகிற வாலிபர்கள் ஏராளம்.

பெற்றோரின் கட்டுப்பாடு வளையத்தை விட்டு விலகி கணவன் மனைவியாக இணைந்து யோசித்து திட்டமிட்டு வாழ்வது தவறல்ல. ஆனால் பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளை கைகழுவிவிட்டு விலகிப்போவது முறையல்ல. இன்று பெற்றோரை கனப்படுத்த அறியாதவர்கள் நாளைக்குத் தங்கள் பிள்ளைகளால் கனவீனப்பட நேரிடும் என்பது தேவநீதி சார்ந்த உண்மை. பெற்றோருக்கு வெறும் பணம் மட்டும் போதாது. அவர்களுக்கு பிள்ளைகளின் அன்பு, ஐக்கியம், உறவு ஆகியவைகளும் வேண்டும். ஏனென்றால் இவைகள் தான் முதிர்வயதான பெற்றோருக்கு ஆறுதல். பெற்றோரை கனப்படுத்துவது தேவன் அருளிய பத்துக் கட்டளைகளில் முக்கியமானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்..

உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக. (எபே 6:3)  
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved