அன்புள்ள அம்மா...

                                                                                                            இல.1, நட்பு இல்லம், 
                                                                                                            நேசர் ஒழுங்கை, 
                                                                                                            அன்பு நகர்.

அன்புள்ள நண்பனுக்கு, 

உன்னோடு இந்த எழுத்துக்கள் மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். எமக்கென்று இவ்வுலகத்தில் எத்தனை உறவுகள் இருப்பினும் தாயெனும் ஒரு உறவே முதன்மையும், தனித்துவமும் பெறுகிறது. ஒவ்வொரு தாயின் பத்து மாத தியாகம் தான் நீயும், நானும்...


ஒரு தாயின் கல்லறையில் எழுதியிருந்த வசனம் இது..
"மகனே! என் பெயரோடு உன் பெயரையும் இந்த கல்லறையில் எழுதி விடு! இப்போதும் உன்னை சுமக்கத் துடிக்கிறேன்" என்று. எத்தனை அன்பு ? உலகத்தில் எத்தனையோ பெரிய தியாகங்கள் இருந்தாலும் தாயின் அன்பின் முன்னால் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போகிறது. 

ஒரு மாலை நேரம் ஒரு சிறுவன் தன தாயின் முன்னாலே ஒரு துண்டை நீட்டினான், அதில் இவ்வண்ணமாய் இருந்தது. 
வீட்டை சுத்தம் செய்தது = 10.00
தம்பி பாப்பாவை வைத்திருந்தது = 5.00
புல் வெட்டியது  = 25.00
கடைக்குப் போனது = 10.00
மொத்தம் = 50.00
இதைப் பார்த்த அம்மாவும் கையில் வாங்கிகொண்டு சிரித்த வண்ணமே பேப்பரின் மறுபக்கம் ஏதோ எழுதினார்.

10 மாதம் உன்னை வயிற்றில் வைத்து சுமந்தது = 00.00 
உனக்கு வியாதி வந்த எல்லா இரவும் விழித்திருந்து ஜெபம் பண்ணியது = 00.00
விளையாட்டுப் பொருட்கள், உணவு, உடை = 00.00
எல்லாவற்றிற்கும் மேலாக எனது அன்பு = 00.00

இதை எல்லாம் வாசித்த மகன் கண்ணீர் விட்டு தன் அம்மாவை ஆரத் தழுவிக் கொண்டான். இது ஒரு  சாதாரண, அனைவரும் அறிந்த கதை தான் இருப்பினும் தாயின் அன்பு இன்னதென்று பாருங்கள். கடைசி நிமிடம் வரை எனக்காகவும், உங்களுக்காகவும் வாழ்வது நம் தாய் தான். உன் தாயை வாழ்நாளில் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதே..

"உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே." (நீதிமொழிகள் 23:22)


இப்படிக்கு, 
அன்புள்ள
சிநேகிதன்

(இது சிநேகிதன் சஞ்சிகையின் ஒரு பகுதி- Batticaloa)
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved