பெண்ணா, பேயா ? (சிறுகதை)

" காளை வயசு, கட்டான சயிசு, களங்கமில்ல மனசு." 
செல்வசேகர் தனது பைக்கை நிறுத்திவிட்டு, லாவகமாக காலைத் தூக்கிப்போட்டு, இறங்கி வந்ததைக் கண்ட அவனது கல்லூரி சிநேகிதர் கிண்டலாகப் பாடி அவனை வரவேற்றனர். அந்தப் பாடல் அவனுக்கு அப்படியே பொருந்தும். ஆறு அடி உயரம், கம்பீரமான தோற்றம், குழந்தை உள்ளம், படிப்பில் கெட்டி...
 
"டேய் உனக்கேற்ற பொண்ணு ஒன்னு முதலாம் ஆண்டு சேர்ந்திருக்கிறாடா!"

ஆனந்தன் வந்ததும் வராததுமாக அறிவித்தான். 

"போடா போ, கன்னத்தில் சுண்டினால் இரத்தம் வரணும்டா. அப்படி பொண்ணுதாண்டா வேணும்." இது செல்வா சேகரின் பதில். 

"அந்தக் குட்டி இன்னும் பதினைந்தே நிமிடத்தில் வகுப்பறையிலிருந்து வெளியே வருவா பாரு."

சேகர் அவ்வளவாக ஆவல் காட்டிக் கொள்ளாமல் கதையடித்து நின்றான். மணி அடித்தது. ஐவர் குழுவின் எல்லாத் தலைகளும் வகுப்பறைப் பக்கமாக திரும்பின. முதலாண்டு பொறியியல் மாணவியர் அளவளாவிக் கொண்டே வெளியேறினர். 

"அதோ பாருடா, அதோ, அதோ, அந்த மயில் கழுத்து நிற சல்வார்."

அசட்டையாகத் திரும்பினான் சேகர். அவளை விட்டுக் கண்களை அவனால் எடுக்க முடியவில்லை. சந்திரன் தான் சேலை கட்டி கல்லூரிக்கு வந்ததோ என்ற கேள்விக்குப் பதிலாக ஒய்யாரமாய் நடந்து வந்தாள் லைலா. 

சேகரின் மனது வேகமாக கணக்கு போட்டது. இறுதியாண்டு படிக்கும் அவன் அடுத்த ஆண்டு அவளைத் திருமணம் செய்தாலும், அவன் மேற்படிப்புக்காக செல்லும் பொது அவள் படிப்பைத் தொடரலாமே. பிள்ளைகளை பற்றி பிந்தி யோசிக்கலாமே. நெற்றியில் போட்டு இல்லை. அது போதும். அம்மா, அப்பாவை சரி செய்துவிடலாம்.

"நம்ம ராஜனோட தங்கச்சிடா." சேகரின் இதயக் கவிதையை எக்ஸ்ரே கண்களால் வாசித்தவன் போல குருநாதன் ஒத்துப்பாடினான். செல்வசேகர் தனது கிளாஸ்மேட் ராஜனுடன் நெருங்கிப் பழகத் துவங்கினான். அவனது வீட்டுக்கு அவ்வப்போது செல்லத் துவங்கினான். லைலாவுடன் பேசக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் தழுவிக்கொண்டான். அழகில் ஐஸ்வர்யாராய் தொற்றுப்போவாள். வாயைத் திறந்தால் லதா மன்கேஷ்கரோ என ஐயம் தோன்றும். தேனொழுகப் பேசுவாள். எத்தனை அழகிய வாய்மொழி! எத்தனைப் பண்பு!

பெற்றோரின் சந்தேகங்களையெல்லாம் திருப்திகரமாய்த் தீர்த்து வைத்தான். காதல் மொட்டுவிட்டது. 

அன்றொரு நாள்... ராஜனின் வீட்டில்...

சேகரும் ராஜனும் முன்னறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். சேகர் வந்தது லைலாவுக்கு தெரியாது. சேகரின் கண்கள் லைலா எப்போது உள்ளறையிலிருந்து வெளியே வருவாளென்று எதிர் நோக்கியிருந்தது. 

பணிப்பெண் இரண்டு கோப்பைத் தேநீரை அவளுக்கும், அவளது அம்மாவிற்கும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அடுத்த வினாடி....

மடைதிறந்தது போன்ற லைலாவின் ஏச்சுக்கள் சரமாரியாக கதவு வழியாக அம்புகள் போல் சேகரின் செவிகளில் பாய்ந்து புண்ணாக்கின. 

"ஏண்டி, அறிவில்லைய உனக்கு? பார்த்து வரத்த் தெரியாத? .....மே....ளே. டீயைக் கொட்டி டிரெஸ்ஸை பாழாக்கிவிட்டாயே...னே..." சுமார் ஐந்து நிமிடங்கள் தாயும் மகளும் இதில் எழுதக்கூடாத வார்த்தைகளால் அவளைத் தாக்கினர். கண்களைத் துடைத்துக்கொண்டே அந்த வாயில்லாப் பூச்சி வெளியேறியது. ஐந்து வருடங்களில் தன வீட்டில் கேட்டிராத கேட்ட வார்த்தைகளை ஐந்தே நிமிடங்களில் கேட்டுவிட்டான் செல்வசேகர். தன் வீட்டில் பணிப்பெண்ணை " அக்கா" என்று கூப்பிட்டு பழக்கப்பட்டிருந்த சேகருக்கு இது விநோதமாய் இருந்தது. இவள் பெண்ணா? பேயா? என்று ஐய முற்றான். பெற்றோர் கேட்ட சில கேள்விகளின் கருத்தாழம் இப்போதுதான் புரிந்தது அவனுக்கு. 

"என்னடா கல்யாணம், கல்யாணம்னு ஒத்தக் காலில் தை தைன்னு குதிச்ச, இப்ப கப்சிப்னு இருக்கியே, என்ன விஷயம்?" அம்மா கேட்டார்கள்.

"அதுக்கு இப்ப என்னம்மா அவசரம்? மெதுவாப் பாருங்க." விழித்தனர் பெற்றோர்.

Dr . லில்லியன் ஸ்டான்லி 
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved