கிறிஸ்டீனா பட்டணத்தில் பிறந்து நவ நாகரிங்கள் யாவும் தெரிந்தவள் தான். ஆனாலும் டீசர்ட், டைட் ஜீன்ஸ், மினி ஸ்கர்ட், முழங்காலுக்கு மேலுள்ள உடைகள் ஆகியவற்றை அவள் அணிவதில்லை. இந்திய, இலங்கை சூழ்நிலையில் இது போன்ற உடைகள் தன்னைப் போன்று இரட்சிப்பின் அனுபவம் பெற்ற உண்மையான கிறிஸ்தவப் பெண்களுக்குத் தகுதியானதல்ல என்று அவள் நம்புகிறாள்.
பெண்களின் உடல் முழுவதும் உடைகளால் மறைந்திருந்தாலும் ஆண்களின் கண்கள் பெண்களைத் தேடிவருவது இயற்கையானது என்பது கிறிஸ்டீனாவுக்குத் தெரியும். ஆனாலும் ஆண்களின் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் போதிய அளவு உடல் மறைக்காத உடைகள் கிறிஸ்தவப் பெண்களுக்குத் தகுதியானதல்ல என்று அவள் நம்புகிறாள்.
அழகாக உடுப்பதோ, கச்சிதமாக உடுப்பதோ தவறு என கிறிஸ்டீனா நினைக்கவில்லை. ஆனால் அழகாய் உடுத்துவது வேறு, ஆடம்பரமாக உடுத்துவது வேறு, கவர்ச்சியாய் உடுப்பது வேறு என்றும் அவள் நம்புகின்றாள். கிறிஸ்டீனா மாடர்ன் டிரெஸ் எல்லாமே கூடாது என்று ஒதுக்காமல், அவைகளில் ஒழுக்கமான அமைப்பும் தோற்றமும் உடைய உடைகள் அணிவதை விரும்புகின்றாள். சுடிதார் போன்ற உடைகளுடன் தேவைப்படுகின்ற துப்பட்டாவை உரிய முறையில் உபயோகிக்காத பெண்களைக் கண்டு வருத்தப்படுகின்றாள்.
உடலை மிகுதியாக இறுக்குகின்ற, உடலைப் போதுமான அளவு மறைக்காத எளிதாக ஆண்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய, சினிமாத்தனமான உடைகளை அணிந்துகொண்டு ஆலயங்களுக்கு வருகின்ற பெண்கள் எப்படி கிறிஸ்தவப் பெண்களாக இருக்க முடியும் என்ற கிறிஸ்டீனாவின் கேள்வி நியாயமானதே.. ஏனென்றால் தகுதியான உடைகளை அணிந்திட வேண்டும் என்று வேதம் போதிக்கின்றதே.... "தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்." (1 தீமோத்தேயு 2:10)