கப்பர்நகூம், இஸ்ரவேல் தேசத்தில் கலிலீ கடலின் வடக்கு கரையில் அமைந்துள்ள ஒரு இடமாகும். பைபிளின் படி இயேசுக்கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார், நாசரேத் இல் வளர்ந்தார். எனினும் நாசரேத் ஊரில் அவரது ஊழியத்தை ஆரம்பித்த போது மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். ஆனாலும் கப்பர்நகூம் அவரது பணிக்கு ஒரு மத்திய பகுதியாக அமைந்தது. அதோடு இப்பிரதேசத்தில் மக்கள் தொகையும் அதிகமாக காணப்பட்டது.
பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து மீண்டு வந்த யூதர்களால் கப்பர்நகூம் உருவாக்கப்பட்டது. மீன்பிடி மையமாகவும் இப்பகுதி காணப்பட்டது. கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் கப்பர்நகூம் இருந்தது (யூத திருக்கோயில்). வேதாகம காலப்பகுதியில் ரோம வரி வசூலிக்கும் மையமாகவும் இது காணப்பட்டது.
இயேசுக் கிறிஸ்து இங்கே அநேக அற்புதங்களை செய்தார் என்று வேதாகமம் கூறுகிறது (நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் சொஸ்தமானது, திமிர்வாதக்காரன் குணமாகுதல்). இப்பகுதியில் தான் கலிலீ கடலிலே மீன்பிடிக்கும் சீமோன், யாக்கோபு, யோவான், அந்திரேயா போன்றவர்களை தன்னை பின்பற்றும் படி இயேசு கேட்டுக்கொண்டதோடு, அவர்களை சீஷருமாய் மாற்றினார். வரிவசூலிக்கும் மத்தேயுவும் கப்பர்நகூமில் இல் தான் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரை பின்தொடர்ந்தான்.
இவ்வாறான பல காரணங்களால் கப்பர்நகூம் ஒரு முக்கிய இடமாக வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் இயேசுவின் போதனைகளை இம் மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் சாபத்திற்கும் உள்ளாகிறது. தற் காலத்தில் 'டெல் ஹம்' என்று இப்பிரதேசம் கூறப்பட்டாலும், தன்னை ஒரு புராதன கப்பர்நகூமாக அடையாளப்படுத்த மறுத்துவிட்டது.