பசியும் தாகமும்....

நாம் வெறுமையாய் இருக்கிறோம் என்பதை நம்முடைய மாம்ச சரீரத்தில் உண்டாகிற பசியும் தாகமும் நமக்கு வெளிப்படுத்துகிறது. இந்த மாம்ச சரீரத்தில் ஏற்படுகிற பசியையும் தாகத்தையும் தீர்க்கும் பொருட்டு நாம் உணவையும் தண்ணீரையும் நாடுகிறோம்.

கிறிஸ்துவின் நீதி மட்டுமே திருப்தியை தரமுடியும் என்பதே ஒவ்வொரு கிறிஸ்தவனின் உள்ளான ஆவலாய் இருக்கிறது. ஆனால் நாம் சுய சித்தத்தை நாடுகிறவர்களாய் இருப்போமானால் நாம் நீதியினால் நிறைக்கப்பட முடியாது. ஒரு மனிதர், தன்னுடைய முழு இருதயத்தோடும் தேவனைத் தேடுவாரானால் அவரைக் கண்டுபிடிப்பார் என்று தேவன் வலியுறுத்துவதை நாம் சத்திய வேதம் மூலம் காணலாம் (எரேமியா 29 :13 ). நாம் நீதியை சுதந்தரித்துக் கொள்ள விரும்பும் போது பாவத்தை குறித்து மனஸ்தாபப்படுவோம். அப்போது தேவன் நம்மிடமிருந்து பாவத்தை அகற்றுவார். நம்முடைய சுயதன்மை அழிக்கப்பட்டு அங்கெ ஆவியின் கனிகளான அன்பு, சந்தோசம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவை (கலாத்தியர் 5 :22 -23 ) இடம்பெறும். பரிசுத்த ஆவி நம்மை கிறிஸ்துவைப் போலாக்கும். 

நீதியை, எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது, இது எளிதாக கிடைக்கக் கூடியதும் அல்ல. பரிசுத்தமான தேவன் தன நீதியை மக்களுக்கு கண்மூடித்தனமாகக் கொடுப்பதில்லை. அவருடைய நீதி இல்லாமல் வாழ முடியாது என்று நினைக்கிற மக்களுக்கே அவர் அதை கொடுக்கிறார். தனிப்பட்ட நீதியைக் குறித்த நம்முடைய விருப்பம், வல்லமையுடையதாகவும், அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறதாகவும், நாம் செய்கிற அனைத்தையும் ஆளுகை செய்கிறதாகவும் இருக்க வேண்டும். நீதியை நாடுகிறோம் என்றாலும், மக்களுடைய கருத்துகளுக்கு மேலாக தேவனுடைய கருத்துக்களை நாம் பொக்கிஷங்களாக எண்ணுகிறோம் என்பது பொருளாகும். 

நீதி என்பது வெறும் பாவம் அல்லாத தன்மையல்ல. இது, தேவன் தன்னுடைய பரிசுத்தத்தை நம்மில் நிறைக்கச் செய்ய அனுமதிப்பதேயாகும் (ரோமர் 6 :11 ). இது கிறிஸ்துவை போல இருப்பதாகும். தேவனுடைய நீதியை முதலாவது நாடிய ஒருவரான இயேசுவே நம்முடைய முன்மாதிரியானவர். இதற்கு பிறகு தான், பிதா அவரை மகிமைப்படுத்தினார். நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தை தேடுகிறவர்களாக மட்டுமல்லாமல், அவருடைய நீதியைத் தேடுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் (மத்தேயு 6 :33 ). நாம் நீதிக்காக பசிதாகமுள்ளவர்களாக இருப்போமானால் திருப்தியடைவோம். 


    "நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்." (மத்தேயு 5:6)
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved