வருகிறவர் இன்னும் கொஞ்சக் காலத்தில் வருவார், தாமதம் பண்ணார் (எபிரேயர் 10 :37 ) என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடியே நம் தேவனுடைய வருகையானது மிக மிக சமீபமாய் இருக்கிறது என்பதைக் குறித்து நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இப்போது நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகினில் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரத்தினை நாம் நம்மை படைத்த தேவனுக்கு கொடுக்கிறோம் என்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.
ரோமர் 11 :29 இல் தேவனுடைய கிருபை வரங்களும் உங்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாம் எத்தனை பேர் இவ் அழைப்பிற்கு உண்மையாய் இருக்கின்றோம்? இன்று நாம் பார்க்கும் போது பலர் தங்களது வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து பணம் சம்பாதிப்பதில் மாத்திரமே குறியாய் இருக்கின்றார்கள். ஆலயத்திற்கு போகவோ, ஊழியங்களில் பங்கு கொள்ளவோ அல்லது தேவனை துதித்து பாடி அவரை கிட்டிச் சேரவோ நம்மில் பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. ஓடி ஓடி உழைத்து சொத்துக்களை சேர்ப்பதால் என்ன பயன்? பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை, என்று வேதம் சொல்கிறது.
பெண்களைப் பார்க்கும் போது வீட்டு வேலைகளிலும், குடும்பத்தை பராமரிப்பதிலும் தங்களது காலத்தை செலவழிக்கிறார்கள். ஆண்டவரை தேட அவர்களுக்கு நேரம் இல்லை. தேவனுடைய சத்தம் அவர்களுக்கு கேட்பதில்லை. (மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.)
இன்னும் பலர் உலக சிற்றின்பங்களுக்குள் அடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டவரின் வருகையை குறித்து எவ்வித கவலையும் இல்லை, பயமும் இல்லை (கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்). இன்று நாம் நிதானித்து பார்ப்போம், மனம் திரும்புவோம். நம் தேவன் நம்மை மன்னிக்க ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். அவர் இரக்கமுள்ள தேவன், நாம் மரித்த பின்பு மனந்திரும்பவும் முடியாது, தேவனுடைய அன்பை மற்றவர்களுக்கு சொல்லவும் முடியாது. ஆகையால் 1 யோவான் 2 :28 இன் படி "இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்."