கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மர் (1812-1883)

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே, ஓசன்னா பாடுவோம் ஏசுவின்தாசரே, இயேசுவேகிருபாசனப்பதியே, உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே... இந்த பாடல்களை அறிந்திராத கிறிஸ்தவர்கள் இலர் என்று சொல்லலாம். இந்த பாடல்களை இயற்றிய கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவரான ஜான் பால்மர்-ன் வாழ்க்கை வரலாறை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும் ஊரில் 1812ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான் தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத் திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது.

ஜான் பால்மரின் தந்தையார் ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவரான மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப் போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறிஸ்தவர் எனும் பெருமைக்குரியவர். இவருடைய அழைப்பின் பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர். இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி.மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதால் அவரை வெறுத்த ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம் தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம் கற்பிப்பதாகக் கூறினார்.

எட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை. வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார். ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.


கல்வி:
தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம்,மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர்கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.


ஆரம்பகாலப் பணி:
ஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு.மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு.ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு.ஆடிஸ் அவர்களுடன் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை செய்து, ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார். 1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின்50ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் "கெம்பீர சத்தம்" என்னும் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் ஜான் பால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி,காட்டுப்புதூர்,ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப்பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.


நற்செய்தி ஊழியம்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர். இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார். ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார். பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி "எங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானே" என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம்.


கீர்த்தனைகள் பாடிய விதம்:
கீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன. ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைகளை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம். தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

ஜான் பால்மரின் மறைவு:
இத்தகைய இனிய படைப்புகளைக் கிறிஸ்தவத் தமிழ் உலகிற்குப் படைத்துத் தந்த ஜான் பால்மரின் முன்னோர்கள்பக்தி வைராக்கியம் மிகுந்த இந்துக்களாய் வாழ்ந்தவர்கள். சோதிடம்,மருத்துவம், இலக்கியம் போன்ற கலைகளில்ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் உடையவர்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்னரே காவிரி பாயும் தஞ்சை பகுதியிலிருந்து திருநெல்வேலிமாவட்டத்திலுள்ளவல்ல நாட்டுப் பகுதியில் சென்று குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து நாஞ்சில் நாட்டுப்பகுதியான மயிலாடிக்குக் குடிபெயர்ந்தனர். வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த ஜான் பால்மரை மகத்துவம்மிக்கக் கீர்த்தனைக் கவிஞராக மாற்றியது மயிலாடி மண்.. எளிய இனியகிறிஸ்தவக் கீர்த்தனைகளை எழுதிக்கொண்டும், கர்த்தரின் புகழ் பாடிக் கொண்டும் இருந்த கவிஞர் 1883 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2 ஆம் நாள்தன்னுடைய 71 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

நன்றி
-மயிலாடி சி.எஸ்.ஐ. ஆலயம்
-விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved