கிறிஸ்தவர்களே ஜாக்கிரதை !!!


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த நாட்களில் சில காரியங்களில் நாம் அவதானமாய் இருக்க வேண்டியதாய் உள்ளது. சமூக இணைய தளங்களில் பரவி வரும் மதச் சண்டை குறித்து அதிக அறிவுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இஸ்லாமியனுக்கும் கிறிஸ்தவனுக்கும் இடையிலான சமர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. ஆரம்பிக்கும் போது சகோதரர் என்று ஆரம்பிக்கும் இவர்கள் இறுதியில் கெட்ட வார்த்தையிலும், அசுத்தத்திலுமே நிறைவு செய்கிறார்கள். ஒருவரை ஒருவர் குற்றஞ் சாட்டுகிறார்கள். எப்படியோ தங்களுடைய மதத்தை சரியானது என்று நிருபிக்க பல குப்பைகளை கிளறுகிறார்கள். இதில் கிறிஸ்தவனாய் இருக்கும் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம். அநேகமான நேரங்களில் கிறிஸ்தவத்திற்கு அல்லது இயேசுக் கிறிஸ்துவிற்கு எதிரான அல்லது கேவலப்படுத்தும் பதிவுகள் நம்மை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது. இறுதியில் தர்க்கத்திற்குள் நாமும் கடந்து செல்கிறோம். இதை தான் நம் இயேசு விரும்புகிறாரா?

ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நாற்பது நாட்கள் உபவாசம் இருந்த பின்பு பிசாசினால் சோதிக்கப்பட்டார் (மத்தேயு 4:1-11). இதன் போது பிசாசு ஆயுதமாக வேத வசனத்தை எடுத்துக் கொள்வதை நாம் காண்கிறோம். பிசாசு நம்மை வேத வசனங்களை வைத்தே சோதிக்க கூடியவன் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல தான் இன்றும் பிசாசு ஆட்கள் மூலமாக வேதத்தை பிழையாக்கும் நோக்கத்துடனும், அதின் மூலமாக நம்மை இடறல் பண்ணவும் முனைகிறான். இதில் ஒரு சிலரை தவிர அநேகமானோர் விழுந்து போகிறோம்.

அநேகமான இடங்களில் 'முடிந்தால் நிருபியுங்கள்' அல்லது வேதத்தின் ஒரு வசனத்தை குறிப்பிட்டு 'இது தான் உங்கள் பைபிளா?' என்று அநேகம் பேர் கேட்பதை பார்க்கிறோம். அதற்கு நாம் சரியான விளக்கத்தை கொடுத்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது தான் உண்மை. இதை தான் அன்று இயேசுக் கிறிஸ்து கூறினார் "பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்." (மத்தேயு 7:6). இயேசுக் கிறிஸ்துவை பற்றி உண்மையாய் அறிய ஆவலாய் உள்ளவர்களுக்கு நாம் விளக்கமளிப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் பிழையாக்கும் எண்ணத்தோடு ஒருவர் நம்மை அணுகும் போது மிகவும் ஜாக்கிரதையாக பதிலளிக்க வேண்டும். சரியான பதில்களை ஒரு முறை கூறினாலே போதும். 

வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதும் போது கூறுகிறார் "புத்தியீனமான தர்க்கங்களையும் வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு." தேவையற்ற வாக்குவாதத்தை உண்டாக்கி பிரிவினையை ஏற்படுத்துவதே பிசாசின் வேலை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 

ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து நம்மை பைபிளையும், கிறிஸ்தவத்தையும் தர்க்கங்கள் மூலம் நிருபிக்கவா தெரிந்து கொண்டார்?. நாம் வாழும் வாழ்க்கை மூலம் அல்லவா அதை அடையாளப்படுத்த முடியும். இயேசுக் கிறிஸ்து தான் வாழ்ந்த வாழ்க்கை மூலமே நிருபித்தார். அவர் சொன்ன சில காரியங்களை பாருங்கள்.

"மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது."

"தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்." 

"தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு."

"உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்."

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." (மத்தேயு 5,6,7)

எனினும் நாம் பேசாமல் இருந்தால் எவ்வாறு நாம் அவர்களிடம் கர்த்தரை பற்றி கூறுவது? சுவிசேஷம் எப்படி அறிவிப்பது? என்று நீங்கள் சிந்திக்கலாம். இயேசுக் கிறிஸ்து தமது சீடர்களை சுவிசேஷ பணிக்கு அனுப்பும் போது "தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்." என்று கூறுகிறார். இயேசு தான் மெய்யான தெய்வம் என்பதை அறிவிக்க வேண்டியது தான் நம் கடமை (நிருபிப்பது அல்ல). அதன் பின் கிரியை செய்வது கர்த்தரே. நம்மில் பலர் இவற்றை மறந்து போகிறோம். எந்த மதத்தையும் கேவலப்படுத்தி அவர்களை இரட்ச்சிப்பினுள் வழிநடத்த முடியாது. ஆகவே நம் இயேசு நமக்கு போதித்த வழியிலே நாம் நடப்போம். பல கேள்விகளுக்கு இயேசுக் கிறிஸ்துவைப் போல் நிதானமாக பதிலளிப்போம். பதில் தெரியாத கேள்விகளுக்கு பிழையான பதில் கொடுப்பதை தவிர்த்து யார் நிமித்தமும் நாம் இடறல் அடையாதபடி ஜெபத்தில் தரித்திருப்போம்.

பிரியமானவர்களே, நாம் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாய் இந்த நாட்களில் நடக்க நம் தேவன் நமக்கு உதவி செய்வாராக. 
Share this article :

+ Comments + 3 Comments

17 October 2013 at 18:24

அனைவருக்கும் பிரயோஜனமான புத்திமதி.

28 October 2013 at 08:37

சிறந்த பதிவு நண்பா இது வாழ்த்துககள்

16 November 2013 at 19:53

good brother

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved