உண்மையான வேலை..

எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். - (கொலோசேயர் 3:24).

குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. அதிக சம்பளம் வழங்கினாலும் அதற்கேற்ப நேர்மையாக யாரும் உழைப்பதில்லை எனபது அந்த கம்பெனி முதலாளியின் நியாயம்.


ஒரு முறை அங்கு சாதாரண சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த ஒருவன், குறைவான சம்பளத்தை குறித்து கவலைப்படாமல் தன்னுடைய முழு பலத்தையும், உழைப்பையும் பயன்படுத்தி, கடுமையாக வேலை செய்தான். அவனுடைய கடுமையான வேலையை கண்டு பிற தொழிலாளர்கள், 'வீணாக நீ இப்படி கடினமாக உழைக்காதே. நீ எப்படி உழைத்தாலும் இந்த கம்பெனி முதலாளி அதை பார்த்து நல்ல சம்பளம் தர மாட்டார்' எனக் கூறினர்.

அதற்கு அந்த மனிதன், 'நான் இந்த முதலாளியிடம் நல்ல சம்பளத்தை எதிர்பார்த்து நேர்மையாக உழைக்கவில்லை. இந்த முதலாளி எனக்கு சம்பளம் குறைவாக தந்தாலும் என்னுடைய பெரிய முதலாளியாகிய தேவன் நியாயமான சம்பளம் தருவார் என்பதே என நம்பிக்கை. அவருக்காகவே நான் உண்மையாய் உழைக்கிறேன்' என்றான்.


ஆம், இவ்வுலகிலே நம் முதலாளிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அதாவது விசுவாசியானாலும், அவிசுவாசியானாலும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து உண்மையாய் உழைக்க வேண்டும். உதாரணமாக வேதத்திலே தானியேல், யோசேப்பு போன்ற வாலிபர்கள் புறஜாதியான ராஜாக்களிடத்தில் பணி புரிந்தாலும் தங்கள் பணியில் உண்மையோடும் உத்தமத்தோடும் இருந்தனர். அதோடு தேவனை பிரியப்படுத்தும் காரியங்களில் மிக ஜாக்கிரதையாக இருந்ததால் தேவன் அவர்களை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தினார். நீங்கள் பணி புரியும் வேலை ஸ்தலத்திலே உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை மிக சிறியதாக இருக்கலாம். பிறரால் அற்பமாக எண்ணப்படுகிற வேலையாயிருக்கலாம். ஆனாலும் அதை முழு ஈடுபாட்டொடும், உண்மையோடும் செய்யுங்கள். அதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் போனாலும், மதிக்காமல் போனாலும் தேவன் உங்களை நிச்சயமாய் கனம் பண்ணுவார்.


உங்கள் அலுவலகத்திலோ, நீங்க வேலை செய்யும் இடத்திலோ உங்களது நடவடிக்கைகளை கண்காணிக்க யாரும் இல்லாதிருக்கலாம், இருப்பினும் உங்கள் பணியினை மிக உண்மையோடும், உத்தமத்தோடும் செய்யுங்கள். ஏனென்றால் உங்கள் செயலை மட்டுமல்ல, இருதயத்தையும் காணும் உயர்ந்த அதிகாரி இயேசு உண்டு. அவர் சிறு வேலையில் உங்கள் உண்மையை கண்டு, உங்களை அநேகத்;தின் மேல் அதிபதி ஆக்குவார்.


பிரியமானவர்களே, இதுவரை நீங்கள் உண்மையும் உத்தமுமாய் உங்கள் கடமைகளை செய்த போதிலும் இதுவரை எந்த நன்மையும் அடையாமல் இருக்கலாம். ஆயினும் சோர்ந்து போகாதிருங்கள். நமது நோகக்மெல்லாம் மனிதர்களிடமிருந்து நன்மைகளை பெறுவதில் மட்டுமே இருக்க கூடாது. நன்மைகளை தேவனிடமிருந்தே எதிர்பாருங்கள். தேவன் பலன் தருவார். ஆகவே நீங்கள் செய்யும் எந்த வேலையையும் மனிதருக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள். அது வீட்டு வேலையோ, பள்ளி வேலையோ, அரசு வேலையோ எதுவாயிருந்தாலும் வேலையின் தரத்தையல்ல, உண்மையையே தேவன் பார்க்கிறார். அந்த உண்மையை இறுதிவரை காத்து ஆசீர்வாதத்தை பெற்று கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved