இம்மானுவேலன் (நத்தார் செய்தி)

"அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்." மத்தேயு 1:23

தேவன் உலகத்தை படைத்தார். அது மிகவும் நல்லது என்று கண்டு அதிலே தன்னோடு ஜீவிக்க ஒருவன் தேவை என்று விரும்பி தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் தமது சுவாசத்தை கொடுத்து மனிதனை படைத்தார். அவன் எப்போதும் தன்னோடு உறவாட வேண்டுமாக அவனுக்கு சில கட்டளைகளை கொடுத்தார். ஆனால் தேவனோடு மனிதன் உறவாடுவதை விரும்பாத சாத்தான் தேவ பிள்ளைகளை தந்திரமாக வஞ்சித்து கீழ்ப்படியாமைக்கூடாக அவர்களை தேவனிடத்திலிருந்து பாவத்திற்கூடாக பிரித்தான். இதனால் தேவனுக்கும் அவர் சிருஷ்டித்த மனுஷனுக்கும் இடையிலான தொடர்பு அற்று பிரிவு ஏற்பட்டது.

பாவம் உலகிலே பெருகி; தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலே பெரும் பிரிவு ஏற்பட்டதால் இன்னும் அதிகம் மனிதன் வழிதப்பி போய்க்கொண்டிருப்பதைப் பார்த்த தேவன் அவர்களை சரியாக வழிநடத்தவேண்டுமாக அவ்வப்போது தமக்கு பயந்தவர்களில் சிலரை தெரிந்து கொண்டு அவர்களுக்கூடாக மனிதனோடு தொடர்பு கொண்டு அவர்களை வழிநடத்தி  வந்தார். ஆனாலும் உருக்கமும் மன இரக்கமுள்ள தேவன் எப்போதும் தாம்  சிருஷ்டித்த அனைவரையும் பாவத்திலிருந்து மீட்டு என்றும் அவர்கள் அனைவரோடும் தன் தொடர்பை ஏற்படுத்த வேண்டுமாக விரும்பினார்.

தமது ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இம்மானுவேலனாக இவ்வுலகத்திற்கு அனுப்பினார். அவர் மரணத்திற்கூடாக சிந்தப்பட்ட இரத்தத்தால்; எமது பாவங்கள் கழுவப்பட்டு நாம் பரிசுத்தமாக்கப்பட்டு அதற்கூடாக இயேசுகிறிஸ்து எமது உள்ளத்தில் இன்றும் இம்மானுவேலனாக வாசம் செய்வதால் எம்மோடு பிதா திரும்பவும் தொடர்புகொள்ளும் சலாக்கியத்தை தந்துள்ளார்.

இன்று இந்த சலாக்கியத்தைப் பெற்ற நாம் அவர் பிறப்பின் நாளைக் கொண்டாடும்போது அவர் பரிசுத்தத்தை குலைக்கக்கூடியதாக திரும்பவும் களியாட்டு, கெட்ட சிநேகிதரின் சகவாசம், படமாளிகை, நடன அரங்கம் ஆகியவற்றை நாடிச்செல்கின்றோமா? இப்படியான காரியங்களில் உல்லாசமாக இந்நாளை கழிக்க நீ ஆயத்தமாகிக்கொண்டிருந்தால் இப்பொழுதே  அதை நிறுத்து. இல்லையேல்; உன்னை பரிசுத்தத்தின் பாதையில் வழி நடத்தி வந்த இம்மானுவேலின் தொடர்பை நீ இழந்து பரிதாபமான நிலையில் தள்ளப்படுவாய்.

"கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்." 1 பேதுரு 3:15

(அன்றன்றுள்ள அப்பம்) 



Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved