இயேசுக் கிறிஸ்து இப்படி நடந்து கொண்டாரா????

இயேசுக் கிறிஸ்துவில் ஒன்று சேர்க்கப்பட்ட நாம் அவர் பிள்ளைகளாய் இருக்கிறோம். அவருடைய நாமத்தினால் நாம் எதைக்கேட்டாலும் அவர் எமக்கு தருகிறவராய் இருக்கிறார். எனினும் விசுவாசத்தின் ஆழத்தையும், நாம் அவரில் வைத்திருக்கும் அன்பையும் தேவன் ஒருவேளை அறிய முற்படும் போது என்ன நிகழும்? பரிசுத்த வேதாகமத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பார்ப்போம். 

இயேசு ஒரு நாள்  தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போய்க்கொண்டிருந்தார். அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: "ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்" என்று சொல்லிக் கூப்பிட்டாள். இப்பொழுது இயேசுவின் வழமையின் படி அவர் அவளது மகளை சுகப்படுத்தியிருக்க வேண்டும். எனினும் இயேசு அந்த இடத்தில் அவளுக்கு எந்த வார்த்தையும் சொல்லவில்லை. இது இயேசுவை நம்பி வந்த அவளுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருந்திருக்கும். அதோடு மட்டும் இந்த ஏமாற்றம் முடியவில்லை, தொடர்ந்து என்ன நடக்கிறதென்பதை கவனியுங்கள். அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: "இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும்" என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதாவது இயேசு பேசாமலிருந்தும் அவள் அவர்களை விடாமல் தொடர்ந்து செல்கிறாள். இதனால் சீஷர்கள் இயேசுவிடம் அவளை அனுப்பிவிடும் படி கேட்கிறார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் "காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல". இவ்வாறு இயேசு சொன்னாலும் அவள் அவரை விடவில்லை அவர் பாதத்தில் விழுந்து அவரை பணிந்து கொள்கிறாள். அதற்கு இயேசு சொல்கிறார் "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல". இந்த வார்த்தையானது அவளுக்கு ஆறுதலை அல்ல, அவமானத்தையே அவளுக்கு கொடுத்திருக்கும். எனினும் அவள் இயேசுவை தவிர தனது மகளுக்கு வேற எவராலும் விடுதலை தரமுடியாது என்பதை அறிந்திருந்தாள். அது அவள் இயேசுவுக்கு அளித்த பதில் மூலம் நமக்கு காட்டுகிறது. "மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே" என்று அவள் சொன்னாள். தன்னை ஒரு நாய் என்றே அவள் ஏற்றுக்கொள்கிறாள். இதற்குப் பின்பும் இயேசு அவளை சோதிக்க விரும்பவில்லை. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: "ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது" என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். (மத்தேயு 15:21-28)

இதே போல தான் யோபுவுக்கும் சோதனை உண்டானது எனினும் அவன் ஒரு போதும் கடவுளை தூசிக்கவில்லை. நாம் சோதிக்கப்படும் போது பின்வாங்கிப்போகிறோம், அல்லது ஒரு அவமானத்தை இயேசுவின் நாமத்தில் ஏற்க மறுக்கிறோம், அல்லது நாம் அவரிடம் வேண்டிக்கொள்வது கிடைக்கவில்லையே என்று பொறுமையிழக்கிறோம். இந்த சம்பவத்தில் அவள் கோபப்பட்டிருந்தால் அவள் அவளது மகளுக்கு சுகத்தை பெற்றிருக்க முடியாது, விசுவாசம் பெரிது என்கின்ற நற்சான்றுதலையும் இயேசுவிடம் இருந்து பெற்றிருக்க முடியாது. ஆகவே நாமும் பொறுமையாய் இருப்போம், எதை எவ்வேளையில் நமக்கு செய்ய வேண்டும் என்று கர்த்தருக்கு தெரியும் (மத்தேயு 6:8). அவசரப்பட்டு வீணராகிவிடாதபடி பொறுமையுடன் இருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.  

இது சகோ.ஸ்டான்லி(இந்திய தேவ மனுஷன்) அவர்களின் பிரசங்கத்தின் ஒரு பகுதி..
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved