இலங்கை பாகம் 1

இலங்கை (Sri Lanka, ශ්‍රී ලංකා, ஸ்ரீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின்  தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 21-22 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சமத்துவ குடியரசு  (Democratic Socialist Republic of Sri Lanka) ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் Ceylon (சிலோன்) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

முற்காலத்தில் இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்) உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் சிலோன் என்பது பயன்படுத்த படுகிறது). 

இலங்கை சிறிய தீவாக இருந்தபோதிலும் 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டதாகும். இலங்கையின் காலத்தால் முந்திய வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி இலங்கையின் வரலாறு கிமு 6ம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் தொடங்குகின்றது. அதே மகாவம்சம் நூலின் படி 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழ் மன்னர்களும் சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆட்சி புரிந்தமைக்கான சான்றுகள் உள்ளன. 

சான்றாக 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னனான  எல்லாளன்  மன்னனுடன் சிங்கள மன்னனான துட்டைகைமுனு போரிட்ட வரலாறு உள்ளது. அத்துடன் துட்டைகைமுனு எல்லாளனுடன் போரிடுவதற்கு முன்பு 32 குறுநில மன்னர்களை வென்றதாகவும் மகாவம்சம் கூறுகிறது. அந்தவகையில் தமிழ் மன்னர்கள் இலங்கையின் தெற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆட்சிப் புரிந்துள்ளனர். எல்லாளனுடனான போரின் பின்னரும் தமிழ் மன்னர்கள் இருந்ததற்கான சான்றுகளும் மகாவம்சத்தில் உள்ளன. எனினும் இதற்கு முன்னரே இயக்கர்நாகர் ஆகிய இரண்டு இனத்தவர்கள் இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இங்கே அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.

தொடக்கத்தில் இந்துக்களாக இருந்த இவர்களிடையே மகிந்த தேரரால் கிமு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பெருமைக்குரிய நாகரிகம், அனுராதபுரம் (அரசு கிமு 200 இலிருந்து கிபி 1000 வரை), பொலன்னறுவை (அரசு கிபி 1070 இலிருந்து கிபி 1200 வரை), ஆகிய இடங்களில் வளர்ச்சியடைந்தன. 

பொலன்னறுவையின் வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் பல்வேறு இராச்சியங்கள் உருவாகின. இலங்கையின் வடபகுதியின் பண்டைய வரலாறு பற்றி இலங்கை வரலாற்று நூல்களில் அதிக தகவல்கள் இல்லை. எனினும் 14ம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலங்கையின் வடபகுதியில் இருந்த தமிழர் தனி அரசு பற்றிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. யாழ்ப்பாண இராச்சியம் என்று வழங்கப்பட்ட இவ்வரசு ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது.

போர்த்துக்கீச தளபதி டொன் லொரன் சோ டி அல்மெய்டா தலைமையில் 1505யில் புறப்பட்ட கப்பல் புயலில் சிக்கித்தவித்து பின்னர் கொழும்பு கரையை அடைந்தது. அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்த போர்த்துக்கீசர், பின்னர் அரசியல் உட்பூசல்களை பயன் படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து கொண்டனர். 1580 போர்த்துக்கீசத் தளபதி கோட்டே மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை பயன்படுத்தி இலங்கையை  போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்டான். பின்னர் 1597 கோட்டே மன்னன் இறக்க இலங்கையின் கரையோரம் போர்த்துக்கீசர் வசப்பட்டது. 

கண்டி இராசதானியுடன் 1638 இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக ஒல்லாந்தர் சிறிது சிறிதாக போர்த்துக்கீசர் வசமிருந்த கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றினர். 1796 இல் ஒல்லாந்தர் ஆங்கிலேய  கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிக்காததால் ஆங்கிலேயர் முதலில் திருகோணமலையையும் பின்னர் மற்றைய இலங்கை கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1801 இல் பிரித்தானியருடன்  செய்த ஒப்பந்தத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு இலங்கையைக் கொடுத்தனர். ஆங்கிலேயர் தமிழரசனுக்கும் சிங்கள பிரதானிகளுக்கும் இடையில் இருந்த பகையை பயன்படுத்தி அதுவரை இலங்கையின் நடுப் பகுதியில், போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிகளுக்கு உட்படாது தனியரசாக இருந்து வந்த கண்டி இராசதானியையும் 1815 யில் தமது சூழ்ச்சியால் கைப்பற்றி முழு இலங்கையையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்தனர்.

ஆங்கிலேயரின் 133 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர், பெப்ரவரி 4, 1948 இல் இலங்கை விடுதலை பெற்றது. ஐரோப்பியரின் ஆட்சி காலத்திலேயே இலங்கையில் கிறிஸ்தவம் அறிவிக்கப்பட்டது. இனி வரும் பகுதிகளில் இலங்கை பற்றியும், இலங்கையில் கிறிஸ்தவம் பற்றியும் எதிர்பாருங்கள்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....

நன்றி- Wikipedia
Share this article :
 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved