
ஒரு தேவ ஊழியர் தன் குடும்பத்தோடு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அது ஒரு குளிர்காலமாக இருந்தது. எங்குப் பார்த்தாலும் பனி பெய்துக் கொண்டிருந்தது. அவர்கள் புறப்பட்ட நேரத்தில் பனி இல்லாமல் இருந்ததால் எப்படியும் இருட்டுவதற்கு முன் போய் சேர்ந்து விடலாம் என்று நினைத்தவர்களாக அவர்கள் போய்க் கொண்டிருக்கும்போது, பனி பெய்ய ஆரம்பித்தது.
பனி மூட்டம் அதிகமாக இருந்தததால் ஒரு இடத்தில் காரை நிறுத்தி விட்டு, பின் செல்லலாம் என்று நினைத்தவராக ஓரிடத்தில் காரை நிறுத்தினார். ஆனால் பனி நிற்பதுப் போல தெரியவில்லை. ஆகையால் மெதுவாக காரை செலுத்தலாம் என்று தீர்மானித்து மெதுவாக ஓட்ட ஆரம்பித்தார். முன்னால் வருவது எதுவும் தெரியவில்லை. ஜெபித்தபடியே 'ஆண்டவரே குடும்பமாக இப்படி மாட்டிக் கொண்டோமே, எப்படியாவது எங்களை வீடு சேர்த்தருளுமே' என்று ஜெபித்துக் கொண்டே ஓட்டிச் சென்றார். மனைவியும் பிள்ளைகளும் அவருடன் சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தனர்.
சற்று நேரத்தில் ஒரு ஷெரீப் தன்னுடைய போலீஸ் காரில் வந்து, 'ஐயா ஏன் இந்த நேரத்தில் இப்படி வந்து கஷ்டப்படகிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு தேவ ஊழியர் நடந்த காரியங்களை சொன்னார். அப்போது ஷெரீப் அவரை தன் பின்னாலேயே வரும்படி கூறிவிட்டு, அவருக்கு முன்பாக வழியை காட்டும்படி சென்றார். அவருடைய வீடு வரை வந்து விட்டுவிட்டு, ஊழியர் நன்றி சொல்வதற்கு முன் அந்த இடத்திலிருந்து காரில் வேகமாக சென்று விட்டார். ஊழியரும் அவருடைய குடும்பத்தாரும் தங்களை தேவதூதனைப் போல வந்து காப்பாற்றின ஷெரீப்பை நினைத்து கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்கள்.ஒருவேளை நம்மில் சிலருக்கும் இதுப்போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். கர்த்தர் நல்லவர்.
'அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்' என்று வேத வசனம் கூறுகிறது. சுhத்ராக் மேஷாக் ஆபெத்நெகோ என்னும் மூன்று எபிரேய வாலிபர்களும், நேபுகாத்நேச்சார் செய்து வைத்த பொற்சிலையை வணங்க மறுத்ததால், ஏழுமடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் தூக்கிப் போடப்பட்டபோது, அவர்கள் பயப்படவில்லை. மாறாக, அவர்கள் ஜெபித்திருக்கக்கூடும், 'ஆண்டவரே இந்த நேபுகாத்நேச்சார் சக்ரவர்த்தியின் முன்பாக உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும், நீரே உலகமனைத்திற்கும் தேவன் என்பதை வெளிப்படுத்தும்' என்று. அந்த ஆபத்தான நேரத்தில் நான்காவது நபராக தேவபுத்திரனின் சாயலாக (தானியேல் 3:25) இயேசுகிறிஸ்துவே இறங்கி வந்து, அவர்களை தப்புவித்தார். மட்டுமல்ல, இராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான் (தானியேல் 3:30) என்றுப் பார்க்கிறோம்.
ஆம், ஆபத்தில் அவரே நம்மோடிருந்து, நம்மை தப்புவித்து, மட்டுமல்ல, நம்மை கனப்படுத்துகிற தேவனும் அவரே. ஆபத்தில் நான் அவனோடிருந்து அவனை தப்புவிப்பேன் என்று சொல்லவில்லை. ஆபத்திலே நானே அவனோடிருந்து அவனை தப்புவிப்பேன் என்று தேவன் சொல்கிறார். ஆம், அவரே நம் ஆபத்துக் காலத்தில் நம்மோடுக் கூட இருப்பார். மற்றவர்கள் யாவரும் நம்மை கைவிட்டாலும், கர்த்தரே நம்மோடிருந்து நம்மை அந்த ஆபத்திலிருந்து தப்புவிப்பது மட்டுமல்ல, நம்மை கனப்படுத்தி, நம் கால்களை மான் கால்களைப் போலாக்கி, நம்மை உயர்ந்து ஸ்தலத்தில் நடக்க செய்வார்.
பிரியமானவர்களே, நம் ஆபத்தான நேரங்களில் கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம். அவர் நமக்கு மறுஉத்தரவு அருளுகிறது மட்டுமல்ல, அவரே அந்த பயங்கரமான நேரத்தில் நம்மோடு கூட இருந்து நம்மை தப்புவிப்பார். அப்போது அந்த பயங்கரமான நேரத்திலிருந்து, சூழ்நிலையிலிருந்து நம்மை தப்புவிப்பது மட்டுமல்ல, நம்மை மற்றவர்கள் முன்பாக கனப்படுத்தி, நம் பெயரை உயர்த்துவார். எத்தனை நல்ல தேவன் நம் தேவன்!
அப்படிப்பட்ட தேவனையே நாம் சார்ந்துக் கொள்வோம். எந்த சூழ்நிலையிலும் அவரையே நோக்கி கூப்பிட்டு, அவரையே பற்றிக் கொள்வோம். அவரே நம்மை தப்புவித்து, கனப்படுத்துவார். ஆமென் அல்லேலூயா!
Post a Comment