கிறிஸ்துவுக்குள் இரத்த அடையாளம்

"நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன். நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும் (யாத். 12:13)."

"விசுவாசத்தினாலே முதற்பேறானவைகளை சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும், இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் அநுசரித்தான் (எபி. 11:28)."

எபிரேயருடைய வீடுகள் அனைத்திலும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தமானது அடையாளமாகப் பூசப்பட்டது. எகிப்தியர்களின் மேலும், அவர்களுடைய தேவர்கள் மேலும் தேவன் நியாயத்தீர்ப்பை செலுத்தியபோது, இரத்தம் பூசப்பட்ட வீடுகளை அவர் கடந்து போனார் (யாத். 12:12).

அடையாளமாகிய இரத்தம்:
உடன்படிக்கை மக்களின் வீடுகளுக்கு இரத்தமே அடையாளம் (யாத். 12:13). தேவ ஜனங்களையும், மற்றவர்களையும் இதுவே வேறுபடுத்திக் காட்டுகிறது. எல்லா மதத்தினரும் இயேசுவை நம்புகின்றனர். ஆனால் சிலுவையில் சிந்தின இரத்தத்தைக் குறித்து இடறலடைந்து விடுகின்றனர். இயேசுவின் இரத்தத்தின் வல்லமையை விசுவாசிக்கிறவர்கள் நிச்சயமாக மற்றவர்களை விட விஷேசமானவர்கள் தான். இந்த அடையாளமே உங்களுக்கு கனத்தையும், வித்தியாசத்தையும் கொடுக்கிறது. அழிவில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு சிவப்பு நூல்தான் நிச்சயமான அடையாளம் (யோசு. 2:12,18). காயீனை கொலைகாரர்களுக்குத் தப்புவிக்க ஆண்டவர் அவன் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார் (ஆதி. 4:15). உங்களை அழிக்க வரும் சாத்தானிடமிருந்து உங்களைக் காப்பதற்காக தேவன் உங்கள் மேல் போட்டிருக்கும் அடையாளமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகும் (யோவா. 8:44; 10:10). தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ள உண்மையான மன்றாட்டு வீரர்கள் மேல் ஒரு விஷேச அடையாளக் குறி இடப்பட்டிருக்கிறது (எசே. 9:4-6). இரத்தத்தால் அடையாளமிடப்பட்ட விஷேசித்த நபர் நீங்கள் களிகூருங்கள்.

காணக்கூடிய இரத்தம்:
நான் இரத்தத்தைப் பார்த்து அந்த வீட்டைக் கடந்து போவேன் என்று ஆண்டவர் திரும்பத் திரும்பச் சொன்னார் (யாத். 12:13,23). ஆவி உலகிற்கு இரத்தம் நன்றாகத் தெரியும். உங்கள் மேல் இருக்கும் இரத்த அடையாளத்தை, தேவ தூதர்களும், சாத்தானும், அவனுடைய தூதர்களும் நன்றாகக் காண்பார்கள். வேவுகாரர்கள் சிவப்பு நூலை அடையாளம் கண்டு இராகாப்பின் குடும்பத்தை காத்தார்கள் (யோசு. 2:17-20; 6:22-25). சாத்தான் உங்கள் மேலிருக்கும் இயேசுவின் இரத்தத்தைக் கண்டு கலங்குகிறான். தமது குமாரனுடைய இரத்தம் உங்கள் மேல் இருப்பதைக் கண்டு கர்த்தரும் உங்களை பாதுகாக்கிறார். இயேசுவின் இரத்தம் உங்கள் மேல் இருப்பதைப் பார்த்து, ஆவியானவர் உங்களை அபிஷேகித்து முத்திரையிடுகிறார் (எபே. 1:13). எங்கு இரத்தம் இருக்கிறதோ, அங்கு தைலம் இருக்கிறது (லேவி. 8:30). எங்கு ஆட்டுக்குட்டியானவர் இருக்கிறாரோ, அங்கு தேவனுடைய புறா இறங்கி வருகிறது (மத். 3:16). உங்கள் மேல் இருக்கும் இரத்தத்தை தேவன் பார்க்கிறார். சாத்தானும் பார்க்கிறான். உங்கள் மேல் இருக்கிற இரத்தத்தை நீங்களும் பார்க்கப் பழகிவிடுங்கள்.

ஆண்டவரே!
"இரத்தத்தைக் கண்டு சங்காரக்காரனை எங்கள் வீடுகளில் எங்களை அதம்பண்ண வரவொட்டாமல் கடந்து போகச் செய்கிறீர் (யாத். 12:23)."



(Fr. S.J Berchmans அவர்களின் முகப்புத்தகத்தில் இருந்து) 
Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved