நீருற்றண்டயில்…..!

யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும் (ஆதி 49:22). யாக்கோபின் குமாரருக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களுள் யோசேப்பின் ஆசீர்வாதங்கள் மிக அருமையானவை இனிமையானவை. யோசேப்பை அவ்வளவாய் ஆசீர்வதித்த ஆண்டவர் நம்மையும் அவ்வாறே ஆசீர்வதிப்பார். அவர் பட்சபாதம் உள்ளவர் அல்ல. 

யோசேப்பை பாருங்கள். அவன் நீருற்றண்டயில் உள்ள கனி தரும் செடி என்று வேதம் சொல்கிறது. வறட்சியான இடத்தில் நாட்டப்பட்டிருக்கும் என்றால் அந்த செடியால் கனி கொடுக்க இயலாது. தேவ பிள்ளையே நீ எங்கே நாட்டப்பட்டிருக்கிறாய்? நீ நீருற்றண்டயில் நாட்டப்பட்டிருப்பாய் என்றால்  கர்த்தருக்காக மிகுதியான கனிகளை கொடுப்பாய்! நீருற்று ஆவியானவரைக் குறிக்கிறது. எந்த மனுசன் ஆவியானவரோடு கூட ஆழமான தொடர்பு வைத்திருக்கிறானோ அவன் கனிகளை கொடுத்துக்கொண்டிருப்பான். செழிப்பாக வாழ்ந்து கொண்டிருப்பான். வல்லமையும் வரமும் நிறைந்தவனாயிருப்பான். இது எத்தனை மேன்மையான பாக்கியம்!!

சாதாரணமாக ஏராளமான கனிகளால் நிரம்பி இருக்கும் மரத்தை பார்த்து நாம் சந்தோஷப்படுகிறோம். எவ்வளவு ருசிகரமான பழங்கள் அழகாய் பழுத்திருக்கிறது என்று மெச்சிக்கொள்வோம். ஆனால் அந்த கனியின் ரகசியம் என்ன தெரியுமா? அந்த மரத்தின் வேர்கள் நீருற்றோடு இடைவிடாமல் தொடர்பு கொண்டிருப்பதாலேயே இருக்கிறது. அதுபோல கனி தருகிற விசுவாசிகளையும் ஊழியர்களையும் பார்க்கிறோம். எப்படி இவர்கள் ஆவியின் வரங்களினால் வல்லமையால் நிரம்பி இருக்கிறார்கள் என்று நாம் ஆச்சரியப்படுகிறௌம். அதனுடைய ரகசியம் என்ன? வேரைப்போன்ற அவர்களின் உள்ளத்தின் ஆழம் தேவ ஆவியானவரோடு ஆழமாய் தொடர்பு வைத்திருக்கிறது. அவர்கள் கர்த்தரோடு சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள்.

விளக்கு பிரகாசமாய் எரிந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். அந்த வெளிச்சத்தில் களிகூருகிறோம். ஆனால் அந்த வெளிச்சத்தின்; ரகசியம் என்ன தெரியுமா? அதனுடைய திரி எண்ணெயோடு இடைவிடாமல் தொடர்பு கொண்டிருப்பது தான். நம்முடைய வாழ்க்கை பிரகாசிக்க வேண்டுமென்றால் நம் உள்ளமாகிய திரி ஆவியானவரோடு இணைந்திருக்க வேண்டும்.
 
பெரிய கட்டடங்களை பார்க்கிறோம். அந்த கட்டடத்தின் உறுதி எங்கே இருக்கிறது? அதனுடைய அஸ்திபாரம் கன்மலையிலே போடப்பட்டிருக்கிறதிலே இருக்கிறது. யார் யாருடைய உள்ளம் கன்மலையாகிய கிறிஸ்துவோடு கூட ஆழமாய் தொடர்பு கொண்டிருக்கிறதோ அவர்கள் மழையையும் புயலையும் வெள்ளத்தையும் கண்டு  தள்ளாடாமல் உறுதியான கட்டடம் போல் நிற்பார்கள்.
தேவபிள்ளையே ஆண்டவர் உன்னை நீர்க்கால்களின் ஓரமாய் நட்டிருக்கிறார். நீ ஆண்டவருக்காக கனி கொடுக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்கிறார். "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தந்து இலையுதிராத மரத்தைப்போல் இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." என்று வேதம் சொல்லுகிறது. (சங் 1:2-3)
 
யோசேப்பின் வாழ்க்கையை திரும்பிப்பாருங்கள். சிறு வயதிலிருந்து அவர் பட்ட பாடுகள், வேதனைகள் அளவிடப்பட முடியாதது. இளம்பிராயத்தில் தாயை இழக்க வேண்டியதாயிற்று. சகோதரர்களெல்லாம் வன்பகையாய் பகைத்தார்கள். கொலை செய்யும் மூர்க்கவெறி கொண்டார்கள். எகிப்துக்கு போனபோதும் கூட அவனுடைய பாடுகள் முடிந்து போகவில்லை. போத்திபாரின் வீட்டில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்டார். சிறைச்சாலையில் தள்ளப்பட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் யோசேப்பு கனி தருகிறவராய் இருந்தார். காரணம் என்ன? இரவும் பகலும் அவருடைய உள்ளம் கர்த்தரோடு தொடர்பு கொண்டிருந்தது.

நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். (வெளி 22: 2)


Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved